பாபா ராம்தேவ் கருத்து கூற தடை விதிக்க முடியாது: டில்லி நீதிமன்றம்

அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில், ‘பாபா ராம்தேவ் கருத்துக் கூற தடை விதிக்க முடியாது’ என, டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது கடைப்படிக்கப்பட்டு வரும் அலோபதி மருத்துவ முறை முற்றிலும் முட்டாள்தனமானது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் மக்களின் உயிரைக் காப்பதிலிருந்து தோல்வியடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம். இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு, ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும்’ என, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்திருந்தார்.

இதனால் பாபா ராம்தேவிற்கு எதிராக டில்லி மருத்துவ கவுன்சில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், ‘அலோபதி மருத்துவத்திற்கு எதிராக கருத்து வெளியிட பாபா ராம்தேவிற்கு தடை விதிக்க முடியாது. அவர் கூறிய கருத்துகள் அடிப்படை சுதந்திரத்தின் கீழ் வரக்கூடியது’ எனக் கூறி, வழக்கை ஜூலை 13ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஆனால், ஜூலை 13ம் தேதி நடைபெறும் அடுத்த விசாரணை வரை எந்தவிதமான ஆத்திரமூட்டும் அறிக்கையும் வெளியிட வேண்டாம் என்று ராம்தேவிடம் கூறுமாறு உயர் நீதிமன்றம் வழக்கறிஞரைக் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.