பாஜக – அதிமுக மோதல் முற்றுகிறது: ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் பதிலடி

அதிமுக, பாஜக இடையே மோதல் வெடிக்கத் தொடங்கி உள்ளது. இரண்டு தரப்பிலும் வார்த்தைப்போரில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறியுள்ளதற்கு ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை கூறுவதாக ஓபிஎஸ் கூறியுள்ளார்.

பாஜக – அதிமுக இடையே நிலவி வந்த நட்பில் தற்போது விரிசல் ஏற்படத் தொடங்கி உள்ளது. மாநில அரசுக்கு எதிராக பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்வதும், மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் விமர்சனம் செய்வதும் அதிகரித்து வருகிறது.

சமீபத்தில் மீனாட்சி அம்மன் கோவில் தீப்பிடித்த விவகாரத்தில் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, தமிழிசை போன்றோர் கடும் விமர்சனத்தை அரசுக்கு எதிராக வைத்தனர். எச்.ராஜா ஒருபடி மேலே சென்று இந்து அறநிலையத்துறைக்கு எதிராக கடும் விமர்சனத்தை வைத்தார்.

இதனிடையே மத்திய அரசு தங்களுக்கு சேரவேண்டிய நிதியை தராமல் புறக்கணிப்பதாக அமைச்சர்கள் குற்றஞ்சாட்டினர். இரு தரப்பிடையேயும் கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், “தமிழகம் அமைதியாக இருக்கிறது என்று கருதுவீர்களேயானால், தமிழகம் இன்று இந்தியா முழுதும் இருக்கின்ற பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையமாக விளங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத அமைப்புகளின் பயிற்சி மையங்கள், களங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. பத்தாண்டுகள் கழித்து இங்கு எப்படி இயங்குவது என்பது குறித்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்திருந்தார்.

பொன் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு குறித்து துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓபிஎஸ் நமது மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து ஜமக்காளத்தில் வடிகட்டிய உண்மைக்கு மாறான பொய் என்று கூறிக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது. இதை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுp பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். பகிரங்கமாக பொதுவெளியில் பாஜக மத்திய அமைச்சரும், மாநிலத்தின் துணைமுதல்வரும் மோதிக்கொள்வதை பார்க்கும்போது பாஜக அதிமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது என அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.