பாகிஸ்தான் முன்னாள் ராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரஃப்க்கு மரண தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு ராஜதுரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது இஸ்லாமாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம்.

2001 – 2008 காலகட்டத்தில் நாட்டின் அதிபராக இருந்த பர்வேஸ் முஷாரஃப், 2007ஆம் ஆண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்தி அரசமைப்பை மீறி ராஜதுரோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ ஜெனரல் முஷாரஃப் 2016ஆம் ஆண்டு முதல் துபாயில் வசித்து வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த இரு தசாப்தங்களாக முஷாரப்பின் வாழ்வானது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.

1999ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ப்பின் மூலம் ஆட்சியைப் பிடித்த முஷாரஃபை படுகொலை செய்ய பல்வேறு முறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவற்றில் இருந்து தப்பிப் பிழைத்தவர் முஷாரஃப்.

ஆனால், கொலை முயற்சிகளில் தப்பிய ராணுவ சர்வாதிகாரி முஷாரஃபுக்கு அரசியல் களம் அவ்வளவு இலகுவானதாக இல்லை. 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவர் தோற்றார்.