பாகிஸ்தாக்கு கொரோனா வைரஸ் வாத்து மூலமா வரணுமா?

பாகிஸ்தானில், பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகளை வேட்டையாட, சீனாவிலிருந்து, ஒரு லட்சம் வாத்துகள் அனுப்பப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களாகவே, அண்டை நாடான பாகிஸ்தானில், கூட்டம் கூட்டமாக படையெடுத்து வரும் வெட்டுக்கிளிகள், விவசாய பயிர்களை கடுமையாக சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாக்,, அரசு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. இதையடுத்து, மற்றொரு அண்டை நாடான சீனாவின் உதவியை, பாக்., நாடியுள்ளது.

 

சீனாவில், சில ஆண்டுகளுக்கு முன், வெட்டுக்கிளிகளால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது, அவற்றை கட்டுப்படுத்த, பயிற்சி பெற்ற வாத்துகள் களமிறக்கப்பட்டன. ஒவ்வொரு வாத்தும், தினமும், 200 வெட்டுக்கிளிகளை பிடித்து தின்னும் திறன் பெற்றவை. கோழிகளும் வெட்டுக்கிளிகளை சாப்பிடும் என்றாலும், அவற்றால், தினமும், 70 வெட்டுக்கிளிகளை மட்டுமே சாப்பிட முடியும்.

‘கோழி, பூச்சி மருந்து ஆகியவைற்றை விட, வாத்துகளை பயன்படுத்துவதன் மூலம், வெட்டுக்கிளிகளை அதிகம் கட்டுப்படுத்த முடியும்’ என, சீன அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாக்., அரசு உதவி கோரியுள்ளதை அடுத்து, நன்கு பயிற்சி பெற்ற, ஒரு லட்சம் வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்ப, சீன அரசு முடிவு செய்துள்ளது.