பழனிசாமி – ராதாகிருஷ்ணன் சந்திப்பு : மோடி வருகை குறித்து ஆலோசனை

தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வந்த, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திடீரென முதல்வர் பழனிசாமியை, அவரது வீட்டில் சந்தித்து பேசினார். தமிழகத்தில், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க.,விற்கும், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள, பா.ஜ.,விற்கும் இடையே, ஜெ., மறைவுக்கு பின், நெருக்கம் அதிகமானது. பிரதமர் மோடி, அ.தி.மு.க.,வை ஆட்டுவிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்த சூழ்நிலையில், சமீப காலமாக, இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி உருவானது. தமிழக பா.ஜ., தலைவர்கள், தமிழக அரசை விமர்சிப்பதும், அவர்களுக்கு, அமைச்சர்கள் பதிலடி கொடுப்பதும் அதிகரித்தது. இவற்றுக்கு சிகரம் வைப்பது போல், ‘தமிழகத்தில், பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடக்கின்றன’ என, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். இது, ‘ஜமுக்காளத்தில் வடிகட்டின பொய்’ என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்தார். இந்த சூழ்நிலையில், நேற்று காலை, மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சமீபத்தில், முதல்வர் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதுபற்றி, பொன்.ராதாகிருஷ்ணன் விசாரித்துள்ளார்.
பின், பிரதமர் மோடியின், தமிழக வருகை குறித்து பேசி உள்ளார். சந்திப்புக்கு பின், பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினோம். குறிப்பாக, பிரதமர் வருகை குறித்து பேசினோம். இரண்டு அரசுகளும், ஒரே சிந்தனையில், ஒரே நிலைப்பாட்டுடன் போகும் போது, தமிழகத்திற்கு, அதிக நன்மைகள் கிடைக்கும். தமிழகத்தின், சட்டம் ஒழுங்கு குறித்து, நான் எதுவும் கூறவில்லை. தமிழகத்தில், பல இடங்களில், பயங்கரவாத செயல்பாடு பயிற்சி நடக்கிறது என, தெரிவித்தேன். இல்லை எனக் கூறினால், ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எனக்கு கிடைத்த தகவல், மிக மோசமான பயிற்சி நடப்பதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்னை தொடர்பான, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்து, தமிழக பா.ஜ., தலைமை முடிவு செய்யும். பிரதமர் மோடியிடம், பா.ஜ., விஷயமாக பேசும்போது, ‘கட்சி விஷயங்களை, அகில இந்திய தலைவரிடம் பேசுங்கள்’ என்றே கூறுவார். அப்படியிருக்கும் போது, இன்னொரு கட்சி விவகாரங்களில், அவர் தலையிடுவார் என, கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.