பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொள்ள முடியாது: கே.பி.முனுசாமி திட்டவட்டம்

ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி 4 ஆண்டுகள் தமிழகத்தில் நீடிக்க வேண்டுமெனில் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் முதல்வராக இருக்க வேண்டும். சசிகலா மூலம் முதல்வர் ஆனவர் பழனிசாமி. அவரை முதல்வராக ஏற்க முடியாது என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி.முனு சாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் காரிமங் கலத்தில் நேற்று அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவின் அணிகள் இணைய வேண்டும் என்பதை கட்சியின் உண்மையான தொண் டர்களும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்டோரும் விரும்புகின்றனர். சசிகலா தரப்பு மூலம் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கு வந்தவர்கள்தான் முரண்பட்டு பேசுகின்றனர்.
தமிழகத்தில், சசிகலா குடும் பத்தினரின் பினாமி ஆட்சிதான் நடந்துகொண்டு இருக்கிறது. ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி 4 ஆண்டுகள் தமிழகத்தில் நீடிக்க வேண்டுமெனில் அவரால் அடையாளம் காட்டப்பட்டவர் முதல்வராக இருக்க வேண்டும். சசிகலா மூலம் முதல்வர் ஆனவர் பழனிசாமி. எனவே அவரை முதல்வராக ஏற்க முடியாது. அதிமுகவின் அணிகள் இணைந்து தமிழகத்தில் நல்லாட்சி தொடர இருப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.