பயங்கரவாதிகளுக்கு வசதிகள் செய்து தரும் பாக்.,: இந்தியா குற்றச்சாட்டு

‘மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய பயங்கரவாதிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அவர்களுக்கு தேவையான வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்து கொடுத்து வருகிறது’ என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாத தடுப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய மூத்த அதிகாரி மஹாவீர் சிங்வி பாகிஸ்தான் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: மனித உரிமைகளை பாதுகாத்து அதை நிலைநிறுத்துவதற்கு நாம் எடுத்துள்ள கூட்டுத் தீர்மானத்தை உறுதிபடுத்துவதற்கான நேரம் இது. பயங்கரவாதத்தின் மையமாக விளங்கும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக தவறான மற்றும் மோசமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதற்காக அம்நாடு இந்த மன்றத்தை மீண்டும் பயன்படுத்தியுள்ளது துரதிர்ஷ்டவசமானது.

இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் தேவையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் பாகிஸ்தானோ பயங்கரவாதத்தை வளர்த்து வருகிறது. பாகிஸ்தான் அரசு எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு ராணுவம் நிதி மற்றும் தளவாடங்களை வழங்கி உதவி செய்து வருகிறது.

கடந்த 1993 மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத சம்பவங்களுக்கு தொடர்பான ஆதாரங்களை இந்தியா அந்நாட்டிடம் பகிர்ந்துள்ளது. இந்த கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டோருக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடையும் விதித்துள்ளது. எனினும் அந்த பயங்கரவாதிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாக். அரசு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், ஷியா சிந்தி பிரிவு சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பாக். அரசு எவ்வளவு பொய்களை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாகவும் அதிகாரம் பெற்றவர்களாகவும் இருப்பதை அவர்களால் மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.