பதினைந்து ஆண்டு கால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு – கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள்

– கலாநிதி நல்லையா குமரகுருபரன்

sri-lankan-news1

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகி ஒக்டோபர் 21ம் திகதியுடன் ஒன்றரை தசாப்தங்கள் நிறைவு பெறுகின்றது. கடந்த 15 ஆண்டகளில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு வாழ் தமிழர் தம் அரசியல் தலைமையாக தமிழ் மக்களால் பல்வேறு தேர்தல்கள் ஊடாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது.

காலத்திற்குகாலம் ஒரு தசாப்தம் கூடியது ஒன்றரை தசாப்த காலங்கள் ஊடாக தமிழ் தலைமை புது வடிவம் எடுத்து வரவேண்டிய தேவை ஏற்படுவதும் புதிய தலைமைத்துவம் கொடுக்கப்படுவதும் இயல்பான வரலாற்று நிகழ்வாகும். இந்த வரிசையிலே கடந்த 15 ஆண்டுகள் தமிழினத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தில் யுத்தத்தின் இறுதி 15 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு கிழக்கு வாழ் தமிழினத்தின் அரசியல் தலைமைத்துவமாக பரிணமித்திருக்கின்றது.

2001ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான ஆரம்ப கட்டம் பற்றிய இரு வேறு விதமான கருத்துக்கள் யதார்த்தத்தை அறியாத பல்வேறு தரப்பினரால் பேசப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இவ் உருவாக்கத்தின் பங்காளி என்னும் வகையில் இப்பதிவினை 15 ஆண்டுகளின் முடிவில் என்று சொல்வதை விட நிறைவில் இன்று இப்பதிவினை மேற்கொள்வது காலத்தின் தேவை என்று கருதுகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னணி பற்றியும் உருவாக்கம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்று பதிவின் தேவை உணரப்படுகின்றது. அந்தவகையில் இந்த அச்சுப் பதிவு காலத்தின் கட்டாயமாகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் ஒரு பங்காளியாக உருவாக்கத்தில் இணைந்து கொண்ட கையொப்பமிட்ட நால்வரில் ஒருவர் என்பதற்கு அப்பால் ஆரம்ப காலத்தில் பாரிய பங்களிப்பு செய்தவன் என்னும் வகையில் முதலாவது தேசியப் பட்டியலில் அமரர் மு.சிவசிதம்பரம் அவர்களையடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக இடம்பெற்றவன் எனினும் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் மறைவின் பின்னர் பாராளுமன்ற ஆசனம் தரப்படாது வஞ்சிக்கப்பட்டவன் எனும் வகையிலும் இப்பதிவை மேற்கொள்ள தகுதியுடையவன் நான் என நம்புகின்றேன்.

இலங்கைத் தமிழர் தம் அரசியல் வரலாற்றில் பல்லாண்டுகளுக்கு ஒரு தடவை ஒன்றுபட்ட அரசியல் தலைமை புத் உதிரம் பாய்ச்சப்பட்டு தமிழ் மக்களால் புதிய தலைமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்திருப்பதை தெளிவாக அவதானிக்க முடியும். அந்தவகையில் சேர்.பொன்னம்பலம் இராமநாதன்,சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் என்னும் சகோதரர்கள் தம் தலைமை 1933 ம் ஆண்டு வரை நீடித்தது என்பது வரலாறு. நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்களும் தமது சமயப் பங்களிப்புகளுக்கு அப்பால் சமுதாய பங்களிப்பாக இவர்களது தலைமைத்துவத்தை பெருமளவில் ஆதரித்த ஒருவர் என்பதை இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும். அதன் பின்னர் ஒரு வகையில் மேல்மாகாணத்தில் எழுந்த பேரினவாதம் தான் சேர்.அரணாச்சலம் அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சட்டசபை பிரதிநிதித்துவம் கிட்டாது போக காரணமாயிற்று. அதே போல் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அவர்களும் ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள பௌத்தத்தின் வளர்ச்சிக்காக கூட உண்மையான இலங்கையராக பணியாற்றி தமிழர் உரிமைகளை வலியுறுத்தி இறுதி காலத்தில் வட இலங்கையிலே இரண்டு பாரிய கல்லூரிகளை அமைத்து நிர்வகித்து அங்கேயே தனது இவ்வுலக வாழ்வை நீத்துக் கொண்டார்.

அடுத்த காலகட்ட தலைமையாக 1929ம் ஆண்டு முதல் தமிழ் தேசியத்தின் தலைவராக சம உரிமையை சம பலத்தை வலியுறுத்தி தமிழ் மக்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட வீரத்தலைமையாக அறிவுசார் தலைமையாக சட்டமேதை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரசும் அதன் தலைவர்களும் திகழ்ந்தனர். இக்கால கட்டத்தில் தான் சுதந்திர இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு சட்டம் சோல்பரி பிரபுவால் வரையப்பட்டது. இக்காலகட்டத்தில் சம பலத்தை வலியுறுத்தி முழு சிறுபான்மை மக்களுக்கும் ஐம்பது வீத சம உரிமையை கோரி நின்றார் ஜி.ஜி.பொன்னம்பலம். அதே போல் தமிழ் பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி திட்டத்தினையும் சீமெந்து கூட்டுத்தாபனம் பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம் கிழக்கிலங்கை காகித ஆலை கூட்டுத்தாபனம் மற்றும் பொற்தொழிலாளர்,புகையிலை உற்பத்தி என்பவற்றிற்கான மானியங்கள் என தமிழ் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர் ஜி.ஜி.பொன்னம்பலம். இதன் பின்னர் சிங்கள தேசம் ஏற்படுத்திய இனவாத நடவடிக்கைகளின் பாதிப்பினால் குறிப்பாக தனி சிங்கள உத்தியோகபூர்வ மொழி சட்டம் சிங்கள ஸ்ரீ அறிமுகம் இனக்கலவரங்கள் என்பவற்றின் காரணமாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் எழுச்சி ஆட்டம் காண மாற்றம் காண நேரிட்டது.

இரண்டு தசாப்தங்களின் இறுதியில் 1952ம் ஆண்டளவில் தமிழ் அரசியல் வரலாறு ஓர் இனவாத தலைமையை ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சா.ஜே.வே செல்வநாயகம் அவர்கள் ஊடாக ஏற்றுக் கொள்ள வேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது. அன்று உருவாகிய தமிழ் கோஷம் இன்றுவரை தமிழர் தம் அபிலாஷைகளை அடையப்பெறவில்லை என்று உறுதியாக கூற முடியும்.

தமிழரசுக் கட்சியினுடைய காலமும் 1970ம் ஆண்டிற்கு இப்பால் அகில இலங்கை தமிழ் காங்கிரசுடன் ஒருமைபாடு காணவேண்டிய தமிழ் மக்கள் தலைமை ஒன்றுபட்டு வலுப்பெற வேண்டிய காலகட்டத்தை 1972ம் ஆண்டு மற்றும் 1978ம் ஆண்டின் புதிய அரசியலமைப்பு சட்டங்கள் ஏற்படுத்தின. இதன் விளைவு தான் வட்டுக்கோட்டை மாநாட்டின் ஊடாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் பின்னர் அதன் பரிணாமம் ஆன தமிழர் விடுதலை கூட்டணியின் உருவாக்கமுமாகும்.

ஆயினும் தமிழர் விடுதலை கூட்டணியின் அரசியல் வலிமையும் இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவராக அமிர்தலிங்கம் அவர்கள் விளங்கிய காலகட்டமும் தமிழ் மக்களின் போராட்டத்தை அடிப்படை அபிலாஷைகளை உலகறிய செய்ததெனலாம். ஆயினும் இந்த மிதவாத அரசியல் பாதை சிங்கள அரசியல் தலைமைகள் அங்கீகரிக்க தவறியதன் விளைவுதான் பிற்காலத்தில் இப்பால் மூன்று தசாப்த யுத்தத்திற்கு வித்திட்டது.

எனவே தமிழர் விடுதலை கூட்டணியின் இறுதிக் காலம் அவர்களோடு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் ஈரோஸ்,ஈபிஆர்எல்எப்,புளொட்,டெலோ,என்பனவற்றோடு எமது அகில இலங்கை தமிழ் காங்கிரசும் வடக்கு கிழக்கு அரசியலிலும் கொழும்பு வாழ் தமிழ் மக்களுடைய அரசியலிலும் வலுவாக பங்கு பற்றி யுத்த அனர்த்தங்களுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் கொடுத்து வந்தனர்.

சந்திரிக்கா அம்மையார் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலமும் இப்பாலும் யுத்தத்தின் கொடூரங்கள் தொடர்ந்தன. இந்த நிலையில் ஒன்பது கட்சிகளாகவும் பின்னர் பதினொரு கட்சிகளாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாலான தமிழினத்திற்கு எதிரான கொடூரங் கண்டு தலைநகரிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் ஒன்றுபட்டு போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக இவைகள் ஒன்றுபட வேண்டிய யதார்த்தத்தை 2000ம் ஆண்டு உணர்ந்து கொண்டனர்.

2000ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அமரர் குமார் பொன்னம்பலம் தலைநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அன்று வரை அவருடன் தோழோடு தோழ் நின்ற எனது அரசியல் அன்று முதல் முன்னணியில் திகழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிஸின் பொதுச் செயலாளராக நானும் தலைவராக சட்டத்தரணி விநாயகமூர்த்தியும் மிகவும் காத்திரமாக வீரியத்துடன் முன்னெடுத்துச் சென்றொம். அதன் விளைவுதான் 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகின்ற பொழுது ஈபிஆர்எல்எப்,புளொட்,டெலோ,என்பனவற்றோடு எமது அகில இலங்கை தமிழ் காங்கிரசும் தமிழர் விடுதலை கூட்டணியும் இணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்துவது காலத்தின் தேவையாகியது.

தமிழ் தலைமைகளின் ஒருமைப்பாட்டின் வெளிப்பாடான தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கும் எண்ணம் முதலில் கருக்கொண்ட து கிழக்கு மாகாணத்தில் என்பதும் ஆயுத போராட்டத்திற்கு இணையாக தமிழர் தம் அபிலா சைகளை திண்ணமாக எண்ணத்தில் கொண்டவர்கள் உச்சபீடமான பாராளு மன்றத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டியதும் அல்லாதுபோனால் ஏற்றப்படக்கூடிய விளைவுகளும் தமிழர் தம் அபிலா சைகளை நேசித்தவர்களால் உணரப்பட்ட நேரம் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்ணம் கருக்கொண்ட போதும் சரி முதற்ற தேர்தலில் விஞ்ஞாபனத்தை உருவாக்கிய போதும் சரி வேட்பாளரை தெரிவு செய்தபோதும் சரி தமிழ் ஈழ விடுதலை புலிகள் எந்தவகையிலும் பங்கு பெறவில்லை. தேர்தல் விஞ்ஞானத்தை உருவாக்கிய பொது நாம் வெறுமனே ஒன்று பட முடியாது ஏக பிரதிநிதிகள் என்பதற்கு மக்களாணை யுடனான அங்கீகாரத்தை வலியுறுத்தியவர் களே அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் தான்.நீண்ட சொல்லாடல் களுக்கு மத்தியில் தமிழர் விடுதலை கூட்டணி யின் தலைவர் இரா சம்பந்தன் ஏகபிரதிநிதிகள் எனும் பிரயோகத்திற்கு பதிலாக என பாவிக்கலாம் என வலியுறுத்தினார். தேர்தல் முடிவுகளில் மக்கள் தந்த ஆணையின் பின்னர் தான் தமிழ் ஈழ விடுதலை புலிகள் தமது வலுவான வகிபாகத்தை ஏற்றப்படுத்தினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கம் கருக் கொண்டதில் ஆரம்ப கர்த்தாக்களாக கிழக்கு மாகாண புத்தி ஜீவிகளுடன் சிவராம் அவர்கள் முக்கிய பங்காற்றினார். அங்கே தான் தமிழ் தலைமைகள் ஒன்றுபடி வேண்டிய துவையை உணர்த்தி கலந்துரையாடல்கள் இடம்பெற்றது. கட்சிகளுடனான் சந்திப்பை மேற்கொண்டவரும் சிவராம் உடன் காலத்திற்கு காலம் அவருடன் இணைந்த நண்பர்களுமே. இந்தவகையில் என்னையும் விநாயகமூர்த்தி அவர்களையும் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்களது இல்லத்தில் சந்தித்தவர்கள் சிவராமும் ஒரு ஆங்கில பத்திரிகையாளரான திஸ்ஸநாயகம் அவர்களும் ஆவர். நான் அவர்களுக்கு கூறிய ஒரே ஒரு விடயம் ஏதெனும் ஒரு கொள்கை அடிப்படையில் அதற்கு மக்கள் ஆணை கேட்டு ஒன்றுபட்டு தேர்தலில் நிற்பதுதான் ஒரு புத்திசாதுரியமான விடயம் என தமிழ் காங்கிரஸ் நம்புகின்றது என்பதாகும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். வழமைபோலவே திடீரென கோபப்பட்டுக் கொள்ளும் சிவராம் கோபபம் கொண்டு திஸ்ஜநாயகத்துடன் சந்திப்பிலிருந்து வெளியேறிவிட்டார்.

21ம் திகதி நள்ளிரவில் கூட்டமைப்பு உருவாக கைச்சாத்திடப்படும் வரை என்னோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக கலந்து கொண்ட முன்னளர் ஐ.நா ஆலோசகர் தில்லைக்கூத்தன் நடராஜா அவர்களும் திம்பு கோட்பாடுகள் மற்றும் ஏக பிரதிநிதித்துவம் என்பவை எதிர்கால அரசியல் தீர்விற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவை என்பதினால் இவை தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினொம். ஆயினும் ஒரு இணக்கப்பாட்டு அடிப்படையில் இறுதி வடிவம் கொடுக்க வெண்டிய ஒரு நிர்ப்பந்தமம் ஏக பிரதிநிதித்துவம் எனும் பதப்பிரயோகத்தை முக்கிய அரசியல் அமைப்பு எனும் வகையில் இரா.சம்பந்தன் அவர்களுடைய ஆலோசனையாக மாற்றத்தை ஏற்றுக் கொண்டோம்.  இவ்விதமாக 2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம் திகதி நள்ளிரவில் தமிழ் கட்சியின் உரிமைப்பாட்டினை வலியுறுத்தி சரஸ்வதி மண்டபம் கூட்டம் முதல் பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் வரை முரண்பாடுகளை தவிர்த்து இணக்கத்தை ஏற்படுத்திய இந்து மாமன்றத் தலைவர் கைலாசப்பிள்ளை,கந்தையா நீலகண்டன்,வி.ஆர்.வடிவேற்கரசன் வர்த்தக பிரமுகர் ஜெயபாலசிங்கம் நிமலன் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் வடிவெற்கரசன் அவர்களது இல்லத்தில் தமிழர் விடுதலை கூட்டணி சார்பாக இரா.சம்பந்தன் அவர்களும் டெலோ சார்பாக அன்றைய டெலோ முதல்வர் ஸ்ரீகாந்தா அவர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பாக பொதுச்செயலாளர்  கலாநிதி என்.குமரகுருபரன் ஆகிய நானும் ஈபிஆர்எல்எப் சார்பாக செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் கைச்சாத்திட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினோம். இன்று நான் நினைப்பதுண்டு சில வேளைகளில் நானும் விநாயகமூர்த்தி அவர்களும் தொடர்ந்து கூட்டமைப்பில் செயற்பட்டிருந்தால் ஓரளவு ஒருமைப்பாட்டினை காப்பாற்றியிருக்க முடியும். கருத்து முரண்பாட்டினை வெளி கொணர்ந்து சீர் செய்திருக்க முடியும்.  அந்த வகையில் தமிழ் காங்கிரசும் தமிழர் விடுதலை கூட்டணியும் வெளியேறும் நிலையை தவிர்த்திருக்க முடியும் என்பதாக. ஆயினும் பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒரு பலமுள்ள ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது எதிர்காலத்தில் எமது அபிலாஷைகள் அரசியல் தீர்வில் இடம்பெற வேண்டுமாயின் முக்கியமான ஒன்று என்பது காத்திரமான உண்மை.

இந்த 15 ஆண்டுகால நிறைவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருமைப்பாடுஆரம்பத்தில் இருந்த நிலையிலிருந்து முரண்பாடுகளை கொண்டிருப்பதன் விளைவுதான் அதனை வழி நடத்தும் வகையில் தமிழ் மக்கள்  பேரவை உருவாக வேண்டியது காலத்தின் தேவையாக அமைந்தது இதே எண்ணப்பாட்டோடு தான் அமரர் செல்வநாயகம் அவர்களுடைய மைந்தன் சந்திரகாசனும் ஈராண்டுகளுக்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகளின் அரங்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என்று சிந்திக்க முடியும். இன்றைய யதார்த்த நிலையில் அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாகும் பொழுது சில ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் பற்றிய கருத்து நிலைகளை தவிர்த்து நல்வழிப் படுத்த முடிந்ததோ அதே போல இன்றும் காத்திரமான அரசியல் தீர்விற்காக மட்டுமல்ல தமிழ் மக்களுடைய பல்வேறு இன்னோரன்ன பிரச்சினைகள் சார்பாக அனைவரும் அனைத்து தரப்புக்களும் ஒருமித்த கருத்தினை கொண்டிருக்கும் வகையில் ஒன்றுபட விரும்பும் அனைவரையும் தனிநபர்களுடைய விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் ஒன்றுபடுத்தி பலம் காண தமிழரசுக் கட்சி மட்டுமன்றி எனைய கட்சிகளும் காத்திரமாக செயற்படும் வகையில்   அரவணைத்துச் புத்துதிரம் பாய்ச்சி புதுமை காண வேண்டும். தமிழினம் அபிலாஷைகளை அடையப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி 15 ஆண்டுகள் நிறைவு காணும் தமிழ் தேசிய கூட்டமைப்புர் பறந்து விரிவுபட வேண்டும் எனும் விசுவாசமான எண்ணத்துடன்  இவ்வரலாற்றுப் பதிவை  நிறைவு செய்கின்றேன்.