- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து
சென்னை ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி (ஏப்ரல் 12) நடைபெறவிருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு இதற்கான உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தேர்தல் ஆணையர்கள் ஓ.பி.ராவத், ஏ.கே.ஜோதி ஆகியோர் தேர்தல் ரத்து உத்தரவில் கையெழுத்திட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் மதுசூதனன், தி.மு.க மருதுகணேஷ் உள்ளிட்ட 62 பேர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. மேலும், பணம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெருமளவில் கிடைக்கப்பெற்றது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் கண்டெக்கப்பட்ட ஆவணங்களில் இடைத்தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதையும் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.
கெடுபிடியை மீறி பட்டுவாடா:
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பணப்பட்டுவாடா, முறைகேடுகளைத் தடுப்பதற்காக அதிகாரிகள் மாற்றம், அதிக அளவிலான பார்வையாளர்கள் நியமனம் என பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இதையும் மீறி வாக்காளர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வரை வழங்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தன.
இதையடுத்து, தேர்தல் ஆணைய செலவின பிரிவு இயக்குநர் விக்ரம் பத்ரா, ஆர்.கே. நகர் தேர்தலுக்கான சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர், கடந்த 6-ம் தேதி சென்னை வந்து தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வருமானவரித் துறை சோதனை:
இதற்கிடையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சமக தலைவர் நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த 7-ம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு அதிமுக அம்மா கட்சி சார்பில் ரூ.89 கோடி பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் நேற்று முன்தினம் ஊடகங்களில் வெளியாயின.
சோதனையின்போது கைப்பற்றப் பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக வருமான வரித்துறையினர் எந்தத் தகவலையும் வெளியிடாவிட்டாலும், ஊடகங்களில் வெளியான தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.
சம்மன்:
சோதனை அடிப்படையில், அமைச்சர் விஜய பாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என வருமான வரித் துறை சம்மன் அனுப்பியுள்ளது. சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
டெல்லி பயணம்
இதற்கிடையே பணப் பட்டுவாடா, வருமான வரித்துறை சோதனை தொடர்பான அறிக்கைகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பினர். இருவரையும் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதைடுத்து விக்ரம் பத்ரா நேற்று முன்தினம் டெல்லி சென்றார். அவரைத் தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் டெல்லி சென்றார். இவர்கள் இருவரும் தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதியுடன் நேற்று ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.
ஆலோசனையின் அடிப்படையில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.