பணத்துக்காக மட்டும் நடிக்க வரவில்லை: பார்வதி நாயர்

படித்தவர்கள், சினிமாவுக்கு வரும் வரிசையில் வந்த இன்னொரு நடிகை, பார்வதி நாயர். பார்த்திபனின், கோடிட்ட

இடங்களை நிரப்புக படத்திற்காக, தன் நடிப்பால் ரசிகர்களின் மனதை நிரப்ப காத்திருக்கும், பார்வதியுடன் ஒரு சந்திப்பு:

என்னை அறிந்தால் படத்துக்கு பின், உங்களை அதிகம் எதிர்பார்த்தோமே?

சினிமாவில் தான் இருக்கிறேன்; ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டி விட்டு போகாமல், கொஞ்சமாவது, நல்ல படங்களில் நடிக்கலாமே என, ஆசைப்படுகிறேன்.

உங்களை போன்று, படித்த பலரும், சினிமாவில் நடிக்க ஆசைப்படுவது ஏன்?

நான், சினிமாவில் நடிப்பேன் என, கனவில் கூட நினைத்தது இல்லை. கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்கும் போதே, மாடலிங் துறையில் பிசியாக இருந்தேன். மலையாளத்தில், ‘பாப்பின்ஸ்’ என்ற படம் கிடைத்ததை, தொடர்ந்து, மற்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு வந்தது. இனி, நடிப்பு தான், நமக்கு தொழில் என்றாகி விட்டது. தமிழ், மலையாளத்தை தொடர்ந்து, தற்போது, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து வருகிறேன்.

கோடிட்ட இடங்களை நிரப்புக படம் பற்றி சொல்லுங்க?

ஏழ்மையான குடும்ப பெண்ணாக, சாந்தனு மனைவியாக நடிக்கிறேன்; கொஞ்சம் கிளாமர் இருக்கும். வழக்கமான படமாக இது இருக்காது.

பார்த்திபன் இயக்கத்தில் நடிப்பது?

அவர், காமெடியில் எப்படி கலக்குவாரோ, அதே அளவுக்கு, வேலையிலும் கரெக்ட்டாக இருப்பார். எனக்கு கதை சொல்லும் போது கூட, ‘கிளைமாக்ஸ்’ என்ன என்பதை சொல்லவே இல்லை; அப்படி ஒரு ‘சர்ப்ரைஸ்’ இருந்தது. வசனத்தை எல்லாம் மனப்பாடம் செய்ய சொல்லி விட்டார். இதனால், கொஞ்சம் பயமாக இருந்தது. அக்டோபரில், படப்பிடிப்பை துவங்கினார். இப்போது, எல்லா வேலைகளும் முடிந்து, ரிலீசுக்கு தயாராக உள்ளது

சாந்தனு பற்றி?

எல்லாருக்கும் இவரை ரொம்ப பிடிக்கும். படத்தில், அவரது ‘லுக், ஸ்டைல்’ எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். இந்த படத்தில், சாந்தனுவை புதிதாக பார்க்கலாம்.

என்னை அறிந்தால் படத்துக்கு பின், இவ்வளவு இடைவெளி ஏன்?

அந்த படத்துக்கு பின், இரண்டு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டியிருந்தது. தமிழில், ஒரே மாதிரியான கதைகள் தேடி வந்தன. ஆனால், அடுத்த லெவலுக்கு போக வேண்டுமென்றால், இது சரியாக வராது என்பதற்காக, நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். பணத்துக்காக மட்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை; ஆத்ம திருப்திக்காகவும் நடிக்க விரும்புகிறேன்.

உங்கள் எதிர்பார்ப்புகள்?

எப்படியும், தமிழ் ரசிகர்கள் மனதில், ஒரு சின்ன இடத்தை பிடிக்க வேண்டும்; நல்ல படங்களில் நடிக்க வேண்டும்; அவ்வளவு தான்.