படுமோசமான தோல்வியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெளியேற்றம்: 2-ம் இடம் பெற்று பிளே ஆஃபுக்கு புனே முன்னேற்றம்

பூனேயில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோசமான தோல்வியைச் சந்திக்க புனே அணி வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் 2-ம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
டாஸ் வென்ற புனே அணி முதலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பேட்டிங்குக்கு அழைத்து அருமையான பந்து வீச்சுடன் பஞ்சாபின் மோசமான பேட்டிங்கும் கைகொடுக்க அந்த அணியை 15.5 ஓவர்களில் 73 ரன்களுக்குச் சுருட்டியது. தொடர்ந்து ஆடிய புனே 12 ஓவர்களில் 78/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி 3 கேட்ச்களைப் பிடிக்க புனே அணியின் உனட் கட், ஆடம் ஸாம்ப்பா, கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெடுகளை வீழ்த்த தாக்குர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பிளே ஆஃப் சுற்றில் வரும் செவ்வாயன்று புனே அணி மும்பை இந்தியன்ஸ் அணியையும் புதனன்று கொல்கத்தா அணி சன் ரைசர்ஸ் அணியையும் சந்திக்கின்றன.
பிட்சில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்ததால் பந்துகள் டிரைவ் லெந்தில் வந்தாலும் கூடுதல் பவுன்ஸ், மற்றும் சறுக்கிச் சென்ற இயல்பு காரணமாக பஞ்சாப் பேட்டிங் சரிவு கண்டது. பவர் பிளேயில் 32/5 என்று ஆனது பஞ்சாப். பிறகு தங்கள் ஆகக்குறைந்த ஐபிஎல் ரன் எண்ணிக்கையான 73 ரன்களுக்குச் சுருண்டது.
இன்னிங்ஸின் முதல் பந்தில் உனட்கட், மார்டின் கப்திலை ஷார்ட் கவரில் கேட்ச் கொடுக்க வைத்துத் தொடங்கினார். பிறகு இயன் மோர்கனை ரன் அவுட்டும் செய்தார் உனட்கட். பிறகு ஒரு அருமையான கேட்சையும் எடுத்தார். கடைசியில் அவர் 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். புவனேஷ் குமாரைக் காட்டிலும் 4 விக்கெட்டுகளே குறைவு.
பஞ்சாப் அணியில் அக்சர் படேல் மட்டுமே அதிகபட்சமாக 22 ரன்களை எடுத்தார். பஞ்சாப் இன்னிங்ஸில் மொத்தம் 5 பவுண்டரிகல் 2 சிக்சர்களே அடிக்கப்பட்டது.
74 ரன்கள் வெற்றி இலக்கு ஒரு பேட்டிங் பயிற்சியாகப் பார்க்கப்பட்டது. நிதானமாக ஆடி புனே இலக்கை எட்டியது. லாங் ஆனில் சிக்ஸர் அடித்து ரஹானே வெற்றியை சீல் செய்தார். ரஹானே 34 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 34 ரன்களையும் ஸ்மித் 15 ரன்களையும் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ராகுல் திரிபாதி 4 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து படேல் பந்தில் பவுல்டு ஆனார்.
ஆட்ட நாயகனாக ஜெய்தேவ் உனட்கட் தேர்வு செய்யப்பட்டார்.