படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: என்ன செய்யப் போகிறார் விஷால்?

படப்பிடிப்பு முடியும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், என்ன செய்யப் போகிறார் விஷால் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் ‘சீம ராஜா’. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். சூரி, சிம்ரன், நெப்போலியன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் காமெடி டிராமா படமாக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் எடிட் செய்கிறார். கடந்த வருடம் தென்காசியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, வருகிற 19-ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், செப்டம்பர் 13-ம் தேதி, அதாவது ஆயுத பூஜை விடுமுறைக்குப் படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றதில் இருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், படங்களின் வெளியீட்டுத் தேதியை தயாரிப்பாளர் சங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்பதும் ஒன்று. அதன்படி, ‘நாங்கள் இந்தத் தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய விருப்பப்படுகிறோம்’ என்று தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒரு கடிதம் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்துடன், படத்தின் சென்சார் சான்றிதழையும் இணைத்திருக்க வேண்டும்.

அந்தக் கடிதத்தைப் பரிசீலிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம், அதற்கு முன் சென்சார் ஆகியுள்ள படங்கள் ஏதாவது அந்தத் தேதியில் வெளியிடக் கேட்டுள்ளதா என்று பார்த்து, சென்சார் செய்யப்பட்ட தேதியின் அடிப்படையில் வெளியீட்டுத் தேதியை ஒதுக்கிக் கொடுக்கும். அதனால் தான், ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட ‘காலா’, ஜூன் 7-ம் தேதி ரிலீஸானது.

இந்நிலையில், இன்னும் படப்பிடிப்பே முடியாத சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ படம் செப்டம்பர் 13-ம் தேதி ரிலீஸ் என்று அறிவித்திருப்பது, சினிமாத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விஷால் என்ன முடிவெடுக்கப் போகிறார்? என்ற கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

‘எங்களிடம் சென்சார் சான்றிதழுடன் தயாரிப்பு நிறுவனம் கடிதம் கொடுத்த பிறகுதான் தேதியை முடிவு செய்வோம்’ என்று விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சமாதானம் சொன்னாலும், இப்படி ஒரு விதிமுறை அமலில் இருக்கும்போது, தேதியைத் தாங்களாக அறிவிக்க 24 ஏஎம் ஸ்டுடியோஸுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.