படங்கள் வெற்றி பெற்றாலும், சம்பளத்தை அதிகரிக்காதது ஏன்?- விஜய் சேதுபதி விளக்கம்

ஒவ்வொரு படத்துக்கும் சம்பளத்தை அதிகாரிக்காததன் காரணத்தை விஜய் சேதுபதி அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளார்கள். தணிக்கையில் ’ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதால், மறுதணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.

‘விக்ரம் வேதா’ படத்தை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் “நிறைய வெற்றி படங்கள் கொடுத்தாலும், ஏன் பெரியளவுக்கு சம்பளத்தை அதிகரிக்கவில்லை” என்ற கேள்விக்கு கூறியிருப்பதாவது:

மாதவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, எப்படி உடம்பைக் குறைத்தீர்கள் என்று கேட்டேன். ‘திருப்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன், உணவைக் குறைத்தேன் என்றார். நானும் திருப்தி என்ற மருந்தை எடுத்துக் கொள்கிறேன். என் படங்கள் பெரிய வெற்றியடைய வேண்டும் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

சம்பளம் தான் முக்கியம் என்றால், பாதையை மாற்றி வேறு வழியில் சென்று கொண்டிருப்பேன். ஒவ்வொரு படத்துக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போயிருப்பேன். நான் அதற்காக சினிமாவுக்கு வரவில்லை. அதற்காக கஷ்டப்படவில்லை. நடிப்பு மீதுள்ள காதலினால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்

இவ்வாறு கூறியுள்ளார் விஜய் சேதிபதி.