‘நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்’ : ஜெயலலிதாவின் மகன் என உரிமை கோரிய நபருக்கு நீதிபதி கடும் எச்சரிக்கை

ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இளைஞரை விசாரித்த நீதிபதி, ‘நீதிமன்றத்துடன் விளை யாடினால் சிறைக்கு அனுப்புவேன்’ என எச்சரித்தார்.

ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் கிராமம் முத்துகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தி (32) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப் பதாவது:

நான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மகன். கடந்த15.2.85-ல் பிறந்தேன். ஈரோடு காஞ்சி கோவிலைச் சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு 1986-ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் என்னை தத்து கொடுத்தனர். எனது வளர்ப்புத் தாய் மற்றும் தந்தையுடன் ஈரோட்டில் வசித்து வரும் நான் பலமுறை ஜெயலலிதாவை சந்தித்து இருக்கிறேன். போயஸ் தோட்டத்தில் விழா நடத்தி, பொது மக்களுக்கு என்னை அறிமுகப் படுத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாக ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக சசிகலாவிற்கும், ஜெயலலிதாவுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்கு வாதத்திற்குப் பிறகு கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். டிசம்பர் 5-ம் தேதி அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் ஒரு பங்களாவில் என்னை அடைத்து வைத்திருந்தனர். பங்களா காவலாளி உதவியுடன் தப்பித்தேன். மார்ச் 11-ம் தேதி சமூக ஆர்வலரான டிராபிக் ராமசாமியை சந்தித்து எனக்கு சட்டரீதியாக உதவும்படி கோரினேன். மார்ச் 12-ம் தேதி முதன்மை செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் தமிழக போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு பாதுகாப்பு கேட்டு மனு அனுப்பினேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கும், எனது வளர்ப்புத் தாய் மற்றும் தந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தொடர்பாக நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமி யுடன் நேற்று ஆஜரானார். மனுவைப் படித்துப் பார்த்த நீதிபதி, ‘‘இந்த மனுவையும், ஆவணங்களையும் பார்த்தாலே இது பொய் வழக்கு என தெளிவாக தெரிகிறது. ஒரு எல்கேஜி மாணவனிடம் கொடுத்தால் கூட இது போலி பத்திரம் என தெளிவாக கூறிவிடுவான். 1986-ல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., இந்த பத்திரத்தில் கையெழுத் திட்டாரா?’’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘‘இந்த நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விளை யாட்டுக்கு பயன்படுத்தினால் நேரடியாக நானே உன்னை (கிருஷ்ணமூர்த்தியை) சிறைக்கு அனுப்புவேன்’’ என எச்சரித்தார்.

பின்னர் டிராபிக் ராமசாமியைப் பார்த்து, ‘‘இந்த வழக்கில் உங் களது பங்களிப்பு என்ன? நீங்கள் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து நீதிமன்றத்துடன் விளை யாடாதீர்கள். அப்படிச் செய்தால் பின்விளைவு கடுமையாக இருக்கும்’’ என நீதிபதி கண்டித்தார்.

அதற்கு டிராபிக் ராமசாமி, ‘‘கிருஷ்ணமூர்த்தி என்னிடம் முறையிட்டு அவரிடம் இருந்த ஆவணங்களையும் கொடுத்தார். அதனால் உதவி செய்தேன். உண்மை என்ன என்பதை உயர் நீதிமன்றமே முடிவுசெய்யட்டும்’’ என்றார்.

பின்னர், நீதிபதி ஆர்.மகாதேவன், மனுதாரரான கிருஷ்ண மூர்த்தியிடம், ‘‘தத்து கொடுத்ததாக கூறப்படும் அசல்ஆவணங்கள் எங்கே?’’ என்றார். அதற்கு அவர் ‘‘அதை இப்போது எடுத்து வரவில்லை’’ என்றார்.

இதனால் கோபமடைந்த நீதிபதி, ‘‘சாலையில் கிடைத்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை எடுத்து அதில் உன்னுடைய படத்தை ஒட்டி போலி ஆவணங்களை தயாரித்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. உன்னிடம் உள்ள அசல் ஆவணங்கள், புகைப்படம், தத்து பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் முன்பாக நாளை (இன்று) ஆஜராக வேண்டும். அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆணையர் விசாரித்து மார்ச் 20-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.