நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் ஆர்ப்பாட்டம்: விசிக பங்கேற்பு

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கக் கோரி ஜூலை 12-ல் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் விசிக பங்கேற்பதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் தலைமையில் செயல்படும் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் நீட் நுழைவுத் தேர்வு குறித்து, கடந்த 04.07.2017 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மமக, இ.யூ.மு.லீக், எஸ்டிபிஐ உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் பங்கேற்றன. அக்கூட்டத்தில், நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது என்று முடிவு செய்யப்பட்டது.

எனவே, நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக்கோரி தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து அக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும்; தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும், பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை மாநிலப் பட்டியலில் மீண்டும் இணைத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜூலை 12ஆம் நாள் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக மாணவர்கள் பங்கேற்க வேண்டுமெனவும் அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஜூலை 12ஆம் நாள் தமிழகமெங்கும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் பெரும் அளவில் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் உணர்வை மத்திய அரசுக்கு எடுத்துரைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாணவரணியினரும் பெருவாரியாகப் பங்கேற்றிட வேண்டுமெனவும் அழைப்புவிடுக்கிறேன்.

தமிழக முதல்வர், உடனடியாக டெல்லிக்குச் சென்று நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டங்களுக்கு ஒப்புதல் பெற்றுவர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.