நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை மாலை சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

”காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருணையுடன் பரிசீலிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவீடு என்ற கொள்கையை தவிர்க்க வேண்டும்.

இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 133 படகுகளை மீட்க வேண்டும். பழங்குடியின மாணவர்களுக்கு 1,882 கோடி உதவித்தொகை வழங்க வேண்டும். பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்.

நீட் உட்பட பொதுத் தேர்வுகளிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.