நீங்கள் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே…!!

‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போகிறீர்களா’ என, நிருபர்கள் கேட்டதால், துணை முதல்வர் பன்னீர்செல்வம் கோபம் அடைந்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது:நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள, மூன்று, எம்.எல்.ஏ.,க்களும், அ.ம.மு.க.,வில் இருப்பதற்கான ஆவணங்கள், சபாநாயகரிடம் உள்ளன. தற்போது, அ.தி.மு.க.,வில், ‘சீட்’ கேட்டு, கிடைக்காதவர்களுக்கு அடுத்த வாய்ப்பு வழங்கப்படும். உள்ளாட்சி தேர்தலும், விரைவில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம், ‘நீங்கள், பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வருகிறதே’ என, நிருபர்கள் கேட்டதற்கு, ‘இந்த கேள்வி அடிமுட்டாள்தனமானது. ஸ்டாலினிடம், காங்கிரசில் சேரப் போகிறீர்களா என கேட்க முடியுமா?’ என, கோபமாக கேட்டார்.

முன்னதாக ”துணை முதல்வர் பன்னீர்செல்வம் மே., 23க்கு பின் பா.ஜ.,வில் இணைவது உறுதி” என அ.ம.மு.க., கொள்ளை பரப்பு செயலர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:’பா.ஜ.,வில்சேரப்போகிறீர்களா’ என கேட்ட மதுரை செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் கோபப்பட்டது ஏற்க இயலாதது. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும் என்ற பயத்தில் தான்

அமைச்சர்கள் இப்படி கோபப்படுகின்றனர். ஜெ., இருந்த போது மோடியை பார்க்க முடியாத அமைச்சர்கள், தற்போது பதவிக்காக மோடியை தேடி செல்கின்றனர்.ஏற்கனவே பா.ஜ.,வில் இணைந்தவர் போல் இருக்கிறார் பன்னீர்செல்வம். திருப்பரங்குன்றம் தொகுதியில் களப்பணிகளை துவக்கி உள்ளோம். தேர்தல் விதிகளை மீறி சபாநாயகரை அரசு கொறடா, அமைச்சர்கள் சந்தித்தது தொடர்பாக புகார் அளிப்போம்’ என்றார்.