நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை: சிம்பு

நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை என்று ஃபேஸ்புக்கில் ரசிகர்களோடு கலந்துரையாடும் போது சிம்பு குறிப்பிட்டுள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, தமன்னா, ராஜேந்திரன், வி.டி.வி கணேஷ், மஹத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் பயணிக்கவுள்ளார்கள். ‘மதுரை மைக்கேல்’ கதாபாத்திரத்தின் டீஸரைத் தொடர்ந்து, மார்ச் 18ம் தேதி ‘அஸ்வின் தாத்தா’ கதாபாத்திரத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்த டீஸரைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக சிம்புவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சிம்பு.

டீஸர் வெளியீட்டைத் தொடர்ந்து, தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வாயிலாக ரசிகர்களோடு கலந்துரையாடினார் சிம்பு. அதில் அவர் பேசியது, “படங்களில் நடிக்க விரும்பவில்லை. ஆனால், ரசிகர்கள் ஊக்குவிப்பதால் மட்டுமே அவர்களுடைய மகிழ்ச்சிக்காக தொடர்ந்து நடித்து வருகிறேன். அவ்வாறு நடித்தாலும் நிறைய படங்களில் நடிக்கும் எண்ணமில்லை. குறைந்த படங்களில் நடித்தாலும், வித்தியாசமான படங்களாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

பல காலங்களுக்கு முன்பு, வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இப்போது அப்படியல்ல. எனக்கு பிரச்சினையின் போது உறுதுணையாக இருந்தவர்களுக்காக மட்டுமே படங்கள் செய்து வருகிறேன். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தால் கூட, அவர்களுக்காக செய்வேன்.

‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டேன். விரைவில் இசை வெளியீடு இருக்கும். அதற்கு முன்பாக ஒரே ஒரு பாடல் மட்டும் வெளியிடும் எண்ணமுள்ளது.

என்னுடைய உடல் எடை மிகவும் அதிகரித்துவிட்டது என்ற கருத்து நிலவுகிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது படத்துக்காக அதிகரிக்கப்பட்டது. படத்துக்குத் தேவைப்பட்டால் இன்னும் 20 கிலோ கூட அதிகரிப்பேன்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் 3 கதாபாத்திரங்கள் மட்டுமல்ல. மற்றொரு கதாபாத்திரம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.