நிர்பயா வழக்கில் தூக்கு உறுதியானது ; மறுசீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

டில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலையான வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மறு சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
டில்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். . அதில் ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். முகேஷ், பவன்குமார், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டில்லி ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

முகேஷ், பவன், வினய் ஆகியோர் மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க கூடிய முகாந்திரம் ஏதுமில்லை என்று மனுவை தள்ளுபடிய செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இன்னும் ஒரே வழிதான் மனுதாரர்களுக்கு உள்ளது. அது ஜனாதிபதியிடம் அளிக்க வேண்டிய கருணை மனு ஆகும்.

தற்போது நீதி கிடைத்துள்ளது. எங்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. குற்றவாளிகளை தூக்கில் போடும் இறுதி நாள் வரை போராடுவோம் என நிர்பயாவின் தாய் ஆஷாதேவி கூறினார்.