நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொல்லப்படுகிறார்களா ?

‘நியூயார்க்கில் நோயாளிகள் கொரோனா தொற்றால் இறக்கவில்லை. முழு அலட்சியம் மற்றும் மருத்துவமனையின் தவறான நிர்வாகத்தால் கொலை செய்யப்படுகின்றனர்’ என கொரோனா நோயாளிகள் வார்டில் பணிபுரியும் நெவாடாவை சேர்ந்த நர்ஸ் கண்ணீர் மல்க கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரண்டு வெவ்வேறு மருத்துவமனையில் பணியாற்றி வரும் நர்ஸ் நிக்கோல் சிரோடேக் பேஸ்புக் நேரலை வீடியோவில் கூறியதாவது,ஒவ்வொரு முறையும் நோயாளியின் சார்பாக நான் வாதிட முயற்சிக்கும்போது, மருத்துவமனை நிர்வாகம் வேறு ஒரு பிரிவுக்கு மாற்றி விடுகின்றனர். நான் பணியாற்றிய இரண்டு மருத்துவமனைகளிலும் இதே போன்று நிகழ்ந்தது.

இனி என்ன செய்வது என்று கூட எனக்கு தெரியாது. வக்கீல் குழுக்கள் கூட இவர்களை பற்றி ஒரு தகவலையும் கொடுக்கவில்லை. கறுப்பினத்தவர்களின் வாழ்க்கை இங்கே ஒரு பொருட்டாகவே இல்லை. எல்லோரும் வாழப் போவதில்லை என்பது எனக்கு தெரியும். நான் ஒன்றும் அறிவில்லாத பெண் இல்லை, டன் கணக்கில் மக்கள் இறக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் இவர்கள் எல்லாம் கொரோனா தொற்றால் இறக்கவில்லை.

மருத்துவ அலட்சியத்தால் நோயாளிகள் இறந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளது. நர்ஸ் ஒருவர் ஒரு நோயாளிக்கு இதயத்துடிப்பு இருந்தபோதே , அவருக்கு தேவையே இல்லாத போதும் அவரிடம் ஒரு டிஃபிபிரிலேட்டரைப் பயன்படுத்தி கொலை செய்தார். அதை தடுக்க அறையை விட்டு நான் வெளியே ஓடியபோது, நர்சிங் இயக்குனர் நர்ஸை நோக்கி தலையை ஆட்டுகிறார். இறுதியில் நோயாளி இறந்துவிட்டார். ஆனால் கொரோனா தொற்றால் அல்ல.

இதே போன்று, ஒரு நோயாளிக்கு தவறான வகை இன்சுலின் வழங்கப்பட்டது. இன்னும் ஆபத்தான வகையில், உடலில் ரத்தப்போக்கு இல்லாத, ரத்தம் குறைவான நோயாளிகளுக்கு இரத்த மாற்றம் செய்யவும் மருத்துவமனை மறுத்து வருகிறது. சரியான ரத்த ஓட்டம் இல்லாமல், வென்டிலேட்டர்கள் நோயாளிகளுக்கு எந்த வகையிலும் உதவாது.

இது கொரோனா நோயாளிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை. யாரும் இதை கேட்பதில்லை. இந்த மக்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அவர்கள் கவனிப்பதில்லை. நான் உண்மையில் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து அவர்களை கொலை செய்யப்படுவதை பார்க்கிறேன்’இவ்வாறு அவர் கூறியுள்ளார்.