நித்தியானந்தாவிற்கு போட்டியாக இப்போது ‛‛சீமானந்தா” !!

நித்தியானந்தாவுக்கு போட்டியாக ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறி ஆசிரமம் அமைக்க போவதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலாகி உள்ளது.

எவ்வளவு விமர்சனங்கள், சர்ச்சைகள் வந்தாலும் அசராத சாமியார் நித்தியானந்தா கூலாக தன் யூடியூப் சேனலில் அவ்வபோது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையே தனித்தீவு ஒன்றை வாங்கி ஹிந்துக்களுக்கு என ‘கைலாசா’ என்ற நாட்டை உருவாக்கி வருவதாகவும் கூறி ஆச்சரியப்படுத்தினார்.

இதற்கென தனி இணையதளமும் உருவாக்கி அதில், 10 துறைகள் உள்ளடக்கிய கைலாசா நாட்டிற்கு நித்தியானந்தா தான் பிரதமர் எனவும் குறிப்பிட்டப்பட்டார். அத்துடன் நிற்காமல் கைலாசாவில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், கைலாசாவை அமைத்தே தீருவேன் எனவும் தெரிவித்தார்.

பல்வேறு புகார்களில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா, யூடியூப்பில் மட்டும் எப்படி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது தெரியாமல் கர்நாடக போலீசார் விழி பிதுங்கி நிற்கின்றனர். பெங்களூரு ஐகோர்ட்டும் பல உத்தரவுகள் போட்டும் நித்தியானந்தா இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை.
கைலாசா நாட்டில் குடியேறுவது குறித்து ஆதரவு குரல்களும் வந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

அந்த குரல்களுடன் தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் குரலும் சேர்ந்துள்ளது. குடியுரிமை சட்டம் குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில், குடியுரிமை பறிக்கப்பட்டால், நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு சென்று ராணுவ அமைச்சராகி விடுவேன் என தெரிவித்திருந்தார்.

இதற்கு, தன் வீடியோவில் நித்தியானந்தா அளித்துள்ள பதில்: தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க, கைலாசா ஒன்றும் திறந்த மடம் அல்ல. அரசியலை விட்டு விலகி, திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி விட்டு, மீனாட்சியின் பாதம் தொட்டு வணங்கினால், சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார், என நிபந்தனை விதித்தார்.

ஆனாலும், சீமானுக்கு நித்தியானந்தா போல சாமியார் ஆக வேண்டும் என்ற ஆசை முன்னதாகவே தோன்றியதாகவே தெரிகிறது. கடந்த வாரம் விக்கிரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், நித்தியானந்தா கோடிக்கணக்கில் வைத்திருக்கிறார். நாம் தெருக்கோடியில் நிற்கிறோம். என்னைக் கேட்டால் அந்த வேலை தான் நல்ல வேலையாக நினைக்கிறேன்.

என் மனைவியும் என்னிடம் எங்கேயாவது 6 மாதம் தலைமறைவாக இருந்து தாடி வளர்த்து சாமியாராக போங்கள் என்கிறார். தனக்கு ஓட்டு போட்டால் நாட்டை காப்பாற்றுவோம், இல்லையென்றால் நீண்ட தாடி வளர்த்து ஸ்ரீஸ்ரீ சீமானந்தா என மலையடிவாரத்தில் ஆசிரமம் அமைப்போம், என்றார்.

இது குறித்து நித்தியனந்தாவின் ஆதரவாளர் ஒருவர் கூறும்போது, ‛‛எது எப்படியோ சீமானை நம்பி நாட்டை கொடுக்க சில தம்பிகள் நினைத்தாலும், மக்கள் நினைக்கவில்லை என்பதற்கு இதுவரையில் அவர்கள் போட்டியிட்ட தேர்தல்களில் தெரிந்திருக்கும். இதனால் விரைவில், தாடி வளர்த்து ஆசிரமம் தொடங்கி நாம் தமிழர் சீமான், ஸ்ரீஸ்ரீசீமானந்தாவாக மாறுவார்” என்றார்.