நாம் தமிழர் சீமான்-விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் : கருத்து வேறுபாடு

தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ் தேசியம் குறித்து அதிகம் பேசும் அரசியல்வாதிகளாக திருமாவளவன் மற்றும் சீமான் இருக்கின்றனர். இருவரும் தமிழ் தேசியம் என்ற கோட்பாடை கொண்டிருந்தாலும், அரசியலில் வெவ்வேறு வழிகளில் சென்றுகொண்டிருக்கின்றனர். அதாவது, தமிழருக்கு தான் தமிழ்நாட்டை ஆளும் உரிமை உள்ளது, தமிழர் உரிமையை மீட்டெடுக்க வேண்டும். அது தன்னால் மட்டுமே முடியும், என க்கூறும் சீமான் தனியாகவே போட்டியிட்டு வருகிறார். ஆனால், திருமாவளவன், இதே கோரிக்கையுடன் இருந்தாலும், தற்போது திராவிடத்தை முன்னிறுத்தும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வருகிறார்.

இந்நிலையில், சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இருவரும் பங்கேற்றனர். அப்போது, தமிழ் தேசியத்தை வென்றெடுப்பது குறித்து திருமாவளவன் பேசியதாவது: கோட்பாட்டில் நம் இருவருக்கும் மாறுபாடு இல்லை. அதை அடைவதற்கு செல்லும் வழியில் மாற்று கருத்துகள் இருக்கலாம். தமிழர் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதிலும், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதிலும் இருவரும் ஒரே கருத்தில் உள்ளோம். ஆனால், ஓட்டு வங்கி அரசியலில் நாம் எந்தநிலையில் இருக்கிறோம்? தமிழக அளவில் திமுக, அதிமுக.,வை தூக்கியெறியும் சக்தியுடன் இருக்கிறோமா?

தமிழ் தேசியத்திற்கு எதிராக சனாதனம் இருக்கிறது. இது இந்திய அளவில் பெரும் வலிமையை பெற்றிருக்கிறது. நாம் இதற்கு எதிராக நிற்க போகிறோமா அல்லது அம்பேத்கரியம், பெரியாரியத்திற்கு எதிராக நிற்க போகிறோமா? தேசிய அளவில் ஜனநாயக சக்தியுடன் இருக்கும் காங்., மற்றும் சனாதன சக்தியுடன் இருக்கும் பாஜ., என வலிமையான இரு கட்சிகள் இருக்கின்றன.
பல முரண்பாடுகள் இருந்தாலும், காங்கிரஸால் மட்டுமே பாஜ.,வை வீழ்த்த முடியும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். ஓட்டு வங்கியில் வலிமை பெறும் வரை நெளிவு சுளிவுகளோடு தான் அரசியல் உத்திகளை வகுக்க வேண்டும். இவ்வாறான விஷயங்களில் இருவருக்கும் கருத்து வேற்றுமை உள்ளது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.இதன் மூலம் சீமான் – திருமாவளவன் இடையே இருக்கும் கருத்து வேறுபாடு வெளிச்சத்திற்கு வந்தது.