நான் தான் பரமசிவன். என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க முடியாது – நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா மீது, பல்வேறு பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாருக்கு சொந்தமான ஒரு தீவை அவர் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தத் தீவுக்கு, ‘கைலாஷ்’ என பெயரிட்டு, தனியாக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. பல்வேறு வழக்குகள் உள்ளதால், நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட், 2018 வரை செல்லுபடியாகும் நிலையில், முன்னதாகவே அது ரத்து செய்யப்பட்டது.

‘புதிய பாஸ்போர்ட் கேட்டு அவர் கொடுத்த விண்ணப்பமும் ஏற்கப்படவில்லை’ என, வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில், ஏதாவது ஒரு, ‘வீடியோ’வை நித்தியானந்தா தினமும் வெளியிட்டு வருகிறார். இன்று (டிச.,09) வெளியிட்ட ‘வீடியோ’வில், தனது ஆதரவாளர்களிடையே அவர் பேசியதாவது:

இந்த உலகம் எனக்கு எதிராக உள்ளது. ஆனால், என் மீது நீங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை மதித்து, உங்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்புகிறேன். நான் தான் ஹிந்துக் கடவுள் பரமசிவன். இந்த உண்மையை நான் சொன்னதற்காக என் மீது எந்த முட்டாள் நீதிமன்றமும் வழக்கு தொடர முடியாது. உங்களுக்கெல்லாம் மரணமே கிடையாது என்ற உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.