நாதுராம் கோட்சே தேசபக்தர் – பா.ஜ எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேச்சு

நாதுராம் கோட்சே தேசபக்தர் என பா.ஜ.வைச் சேர்ந்த பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் பார்லியில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எஸ்.பி.ஜி. எனப்படும் சிறப்பு பாதுகாப்புப் படை திருத்த மசோதா குறித்து லோக்சபாவில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.வைச் சேர்ந்த ராஜா மஹாத்மா காந்தியை கொன்றது ஏன் என நாதுராம் கோட்சே கூறியதை சுட்டிக் காட்டி பேசினார்.

அப்போது குறிக்கிட்ட பா.ஜ. பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் “ஒரு தேசபக்தரை உதாரணமாக கூறக்கூடாது” என்றார்.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் பிரக்யா தொடர்ந்து பேச முற்பட்டார். அவரை பா.ஜ.வினர் உட்காரும்படி சமாதானப்படுத்தினர்.”ராஜா பேசியது மட்டுமே சபைக் குறிப்பில் இடம்பெறும்” என சபாநாயகர் ஓம் பிர்லா உத்தர விட்டார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது நாதுராம் கோட்சேயை தேசபக்தர் என்று பிரக்யா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அதே பிரச்னையை அவர் எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்னை குறித்து பா.ஜ.வைச் சேர்ந்த பார்லி விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியதாவது:லோக்சபாவில் நடந்தது குறித்து பிரக்யாவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தான் கோட்சே குறித்து ஏதும் பேசவில்லை என்று அவர் கூறினார். ஆங்கில ஜெனரல் டயரை சுட்டுக் கொன்ற உத்தவ் சிங் குறித்தே பேசியதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் பேசிய போது ‘மைக்’ வேலை செய்யவில்லை; அதனால் அவருடைய பேச்சு குறிப்பில் இடம்பெறாது.இவ்வாறு அவர் கூறினார்.