நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழக கவர்னர் பன்வாரிலால் சந்திப்பு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது.

அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு சுங்கவரி செலுத்த மாட்டோம் என்று கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் வன்முறை வெடித்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு தரப்பினரும் போராட்டம் அறிவித்து உள்ளனர். ஆளும் கட்சியான அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடையடைப்பு போராட்டத்தை நடத்தி உள்ளது. இதனால் தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மத்திய உள்துறை இலாகாவுக்கு கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை 11.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதற்காக நாடாளுமன்றத்துக்கு தமிழக ஆளுநர் வருகை தந்தார். அங்கு பிரதமர் அலுவலகத்தில் அவரை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் குறித்து பிரதமரிடம் விளக்கினார்.

தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் பன்வாரிலால் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலையே கவர்னர் பன்வாரிலால் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.