நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த தேர்வுக்குழு

இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந்தேதி அதிரடியாக நீக்கினார். பின்னர் முன்னாள் அதிபர் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தார்.

ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனா ஜனவரி 5-ந்தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த கோர்ட்டு சிறிசேனா பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்தது.

இதற்கிடையே கடந்த வாரம் நாடாளுமன்றம் கூடியபோது ராஜபக்சே அரசுக்கு எதிராக 2 முறை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டிலுமே ராஜபக்சே தோல்வி கண்டார்.

இதைத் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண அதிபர் சிறிசேனா அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நேற்றுமுன்தினம் கூட்டினார். இது தோல்வியில் முடிந்தது.

இந்தநிலையில் நேற்றுமதியம் இலங்கை நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. துணை சபாநாயகர் ஆனந்த குமாரசிறி சபையை நடத்தினார். அப்போது ராஜபக்சே அரசு மீது மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோல் எதுவும் நடக்கவில்லை.

துணை சபாநாயகர் கூறுகையில், “சபை கூடும் முன்பாக கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற அலுவல்களை அமைதியாக நடத்துவதற்கு தேர்வுக் குழு ஒன்றை அமைக்க அவர்கள் ஒப்புக் கொண்டனர்” என்றார்.

அப்போது ராஜபக்சே ஆதரவு எம்.பி. தினேஷ் குணசேகரா, அரசாங்கம் எங்களிடம் இருப்பதால் தேர்வுக் குழுவில் எங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ஜனதா விமுக்தி பெரமுனா உறுப்பினர் அனுரா குமார திசநாயகே, ராஜபக்சே தனக்கு பெரும்பான்மை இருப்பதை சபையில் நிரூபிக்கவில்லை. எனவே பெரும்பான்மை உள்ள அணியினரே தேர்வுக்குழுவில் அதிகம் இடம் பெற வேண்டு்ம் என்று வலியுறுத்தினார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் அமளி, கைகலப்பு நடந்தது போல் நேற்று எதுவும் நடக்கவில்லை. 10 நிமிடங்களுக்கு பின்னர் சபையை வருகிற 23-ந்தேதிக்கு துணை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.