நாச்சியாா் – திரைவிமர்சனம் சினிமா விமர்சனம்

அபலை சிறுமியின் கர்ப்பமும், அதனால் அவளுக்கும், அவளது காதலனுக்கும் ஏற்படும் சிக்கலைத் தீர்க்கும் பெண் போலீஸும் தான் நாச்சியார் கரு.

சமையல் பந்தி வேலைகளுக்கு செல்லும், சென்னை குப்பத்து பையன் காத்து எனும் ஜி.வி.பிரகாஷுக்கும், அதே மாதிரி ஒரு குப்பத்தில் பிறந்து பெரிய பங்களா வீடுகளில் வீட்டு வேலை செய்யும் அரசி – இவானாவுக்கும் காதல். இந்த காதல் கசிந்து உருகியதில், கர்ப்பமாகிறார் இவானா. மைனர் காதல், கர்ப்பத்தால், போலீஸு, கேஸு என இவர்களது காதல் மேட்டர் பரபரப்பாக பற்றிக் கொண்டதின் விளைவு, ஜி.வி.பிரகாஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்குப் போக, இவானாவிற்கு அவரது குழந்தை பேறுகாலம் வரை அடைக்கலம் தருகிறார் இந்த கேஸை விசாரிக்கும் போலீஸ் ஆபிஸர் நாச்சியார்- ஜோதிகா.

ஒரு கட்டத்தில், இவனாவின் கர்ப்பத்திற்கு ஜி.வி.பிரகாஷ் காரணமில்லை, இவானாவிற்கே தெரியாது வேறு ஒரு பெரிய மனுஷர் தான் காரணம்… எனும் உண்மை போலீஸ் – ஜோதிகாவிற்கு தெரிய வருகிறது. அதன் பிறகு நாச்சியார் – ஜோதிகாவின் ரியாக்ஷன் என்ன? இவானாவின் கர்ப்பத்திற்கு காரணமான பெரிய மனுஷன் யார்? இதன் பின், இவானா – ஜி.வி.பிரகாஷ் ஜோடி ஒன்று சேர்ந்ததா? அல்லது பிரிந்து சென்றதா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது “நாச்சியார்… ” படத்தின் மீதிக் கதை, களம் எல்லாம்!

காட்சிப்படுத்தல்: இசைஞானி இளையராஜாவின் இசையில், பாலா வின் பி.ஸ்டுடியோஸும், யான் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்க, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார் இவானா, தமிழ் குமரன், ராக்லைன் வெங்கடேஷ், சம்பத் ராம்… உள்ளிட்டோர் நடிக்க, பாலாவின் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் “நாச்சியார் …” படத்தில் ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சீனும் தியேட்டரில் வெடிச் சிரிப்பை கிளப்புவது படத்திற்கு பெரும் பலம்.

கதை நாயகி: எதற்கும், யாருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையான கோபக்கார பெண்போலீஸ் ஆபிஸர் நாச்சியாராக ஜோதிகா, ரொம்பவே மிடுக்கு காட்டி மிரட்டியிருக்கிறார். அதிலும், ஜோதிகா, “யானை நடக்கும் போது சில எறும்புகள் சாகும்…ஆனா, ஒரு சித்தெறும்பு காதுல புகுந்தா யானையே சாகும் …. ” என தன் லஞ்ச லாவண்ய ஹயர் – சுப்பீரியர் டி.சிமேடத்திற்கு சாவால் விடுவதில் தொடங்கி, ஜி.வி.பிரகாஷிடம், க்ளைமாக்ஸில், “டேய், இங்க பாருடா எனக்கும் ஒரு பொண்ணு இருக்கா? நான் எதையும் அவகிட்ட சொல்லலை… என உருகி இவானாவுடன் ஜோடி சேர்த்து வைக்கும் இடத்தில் நம்மையும் உருக்குவது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.

கதாநாயகர்: ஜி.வி.பிரகாஷ் குமார், இந்தப் படத்தில் தான் கொஞ்சம் நடித்திருக்கிறார்…. எனும் அளவிற்கு காத்து எனும் காத்தவராயனாக குப்பத்து சிறுவனாக, இளைஞனாக வாழ்ந்திருக்கிறார் அதிலும் பொம்பளை வியாதி பொண்ணுங்களுக்கு தானே வரணும்? என்னை ஏன் டெஸ்ட் பண்றீங்க? என அவர் கேட்கும் இடங்களில் தியேட்டர் கைதட்டலில் அதிருகிறது.

உப நாயகி அரசியாக, அழகியாக இவானா, பாத்திரத்திற்கு ஏற்ற பக்கா தேர்வு, பளிச் நடிப்பு என கவருகிறதா?

பிற நட்சத்திரங்கள்: இவானாவின் மாமன் சிவணான்டியாக தமிழ் குமரனும் சரி, ஜோதிகாவிற்கு உதவும் போலீஸ் பெரோஸ்கானாக ராக்லைன் வெங்கடேஷும் சரி, யதார்த்த நடிப்பில் ரசிகனை திருப்திபடுத்தியிருக்கின்றனர். சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன் சம்பத் ராம், படுபாதக சேட்டு பைனான்சியர்… உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம்.

தொழில்நுட்பகலைஞர்கள்: சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பில் மொத்தப் படமும் செம நீட். ஈஸ்வரின் ஒளிப்பதிவில் டாப் மற்றும் வைட் ஆங்கிள் ஆரம்ப கார் சேஸிங் காட்சிகளும் இன்னும் பல பிரமாண்ட காட்சிகளும் இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் மிரட்டல். இசைஞானி இளையராஜாவின் இசையில் “ஒன்ண விட்டா யாரும் இல்ல … ” உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்.

“மேயறதுக்கு ஒருத்தன் மேய்க்கறதுக்கு இன்னொருத்தன்னு அலையுதுங்க… ” என்பது உள்ளிட்ட பன்ச் மற்றும் பணத்தை மீத்தேனுடன் ஒப்பிடும் டயலாக்குகள்… உள்ளிட்டவை இப்படத்திற்கு பெரும்பலம்.

பாலா தனது, இயக்கத்தில், அனைத்து மத கடவுள்களையும் ஆங்காங்கே டயலாக்குகளிலேயே ஓட்டுவது, மேலும், நீதிமன்றத்தில், வக்கீலிடம் தென்கலையா? வடகலையா? என நீதிபதி கேட்டு விட்டு ஜட்ஜ்மென்ட் எழுதுவது, “எங்க சுத்தினாலும் கடைசியில எங்க கிட்ட வந்து தான முட்டணும்…” என வக்கீல் போலீஸை கலாய்ப்பது, அதற்கு போலீஸ் “எங்க உடம்புல புடிச்ச செரங்குடா நீங்க…” என பதிலடி தருவது என படம் முழுக்க ஹாஸ்ய சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் வைக்காத பாலா, ஒரு பெண் ஐ.பி.எஸ் ஆபிஸர் ஒரு ஏழை அபலை பெண்ணின் வாழ்க்கைக்கு தன் வேலை வெட்டியை பற்றி கவலைப்படாது இத்தனை உதவுவாரா..? என ரசிகனை யோசிக்கவும் வைத்திருப்பது பலமா? பலவீனமா..? என்பது பொறுத்திருந்து இப்படத்திற்கு கிடைக்கும் வெற்றி, தோல்வியை பொறுத்தே தெரிய வரும். மற்றபடி, சமூக அவலங்களை சாட்டையால் அடிக்கும் படி படம் பிடித்து காட்டியிருப்பதில் வழக்கம் போலவே கவனம் ஈர்த்திருக்கிறார்…. இயக்குனர் பாலா… என்றால் மிகையல்ல!

பைனல்” பன்ச் ” : ரசிகர்களை ஒரு மாதிரி, “நாச்சியார் …’ -‘நச்’ -‘டச்’ செய்கிறார்!”