நாங்கள் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் கலந்து கொள்வார்: ஓ.பன்னீர்செல்வம்

அக்டோபர் மாதம் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் பேசியவை குறித்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் அணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”தமிழ்நாட்டின் நலனுக்காக டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, தற்போது தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்கவும், கடுமையான வறட்சியால் விலங்குகள் உயிரிழப்பைத் தடுக்கவும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கவும்,அத்திக்கடவு-அவினாசி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் வலியுறுத்தி மனு அளித்தது குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.
விவசாயிகளின் துயர் துடைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யவும்,மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவும், முதுகலை மருத்துவ பட்டப் படிப்பில் இடஒதுக்கீடு வழங்கவும், சேலம் உருக்காலைப் பிரச்சினையைத் தீர்க்கவும், மீனவர் சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தது குறித்து, எடுத்துச் சொல்லப்பட்டது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்கள் குறித்தும் விளக்கமாக விவாதிக்கப்பட்டது.
அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) சார்பில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அக்டோபர் மாதம் மிக பிரமாண்டமாகவும், எழுச்சியாகவும் கொண்டாடப்பட இருப்பதை பிரதமரிடம் எடுத்துக்கூறி, அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு பிரதமர் விழாவில் உறுதியாக கலந்து கொள்வதாகவும், விழா நடைபெறும் தேதியை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டதையும், கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகளிடமும், நாடாளுமன்ற- சட்டப்பேரவை உறுப்பினர்களிடமும் எடுத்துச் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.