நாகார்ஜுன் இளைய மகன் திருமணம் ரத்தானதால் நடிகை சமந்தா அதிர்ச்சி

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பே‌ஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள்.

இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான டிக்கெட்டுகள், இத்தாலியில் நட்சத்திர ஓட்டலில் அறைகள் போன்றவற்றை முன்பதிவு செய்தனர். இந்த நிலையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலிக்கும் தகவல் வெளியாகி அவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தையும் தடபுடலாக நடத்தி முடித்தார்கள்.

முதலில் அகில் திருமணத்தை நடத்துவது என்றும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து சமந்தா, நாக சைதன்யா திருமணத்தை ஐதராபாத்தில் நடத்துவது என்றும் முடிவு செய்தார்கள். ஆனால் தற்போது அகில்–ஸ்ரேயா திருமணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை விருந்தினர்களிடம் போனில் தெரிவித்து இத்தாலி பயணத்துக்கு தயாராக வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். திருமணம் நின்றதற்கான காரணம் தெரியவில்லை.

அகில்–ஸ்ரேயா பூபால் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாலேயே திருமணம் நின்றுபோனதாக தெலுங்கு பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. இது நடிகை சமந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது திருமணத்தை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே நடத்தி விட அவர் அவசரம் காட்டுவதாகவும், இதுகுறித்து நாகார்ஜுன் மற்றும் நாகசைதன்யாவிடம் அவர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.