நம்பி வந்தவர்கள் ஏமாற்றம்- விரக்தி:காற்று வாங்கும் தீபா வீடு

தீபா வீட்டுக்கு தொண்டர்களின் வருகை வழக்கத்தை விட குறைவாகவே உள்ளது. பேரவை நிர்வாகிகள் மட்டுமே சிலர் வந்து செல்கின்றனர்.

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கடந்த மாதம் 24-ந்தேதி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி உள்ளார்.

இந்த அமைப்பின் செயலாளராக ராஜா என்பவரை நியமித்தார்.  அமைப்பின் தலைவராக  ராஜாவின் மனைவி சரண்யாவை நியமித்தார். இது தீபா ஆதரவாளர் களின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டு முன்பு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய தீபா புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ராஜா மற்றும் அவரது மனைவியை நிர்வாகிகளாக நியமித்தது தீபாவின் கணவர் மாதவனுக்கும் பிடிக்கவில்லை. அவர் தனக்கு வேண்டியவர்களுக்கு பதவி வேண்டும் என்று அழுத்தம் கொடுக் கிறார்.நிர்வாகிகளை தேர்வு செய் யும் விஷயத்தில் ஆரம்பமே சரியில்லை என்பதால் தீபாவை நம்பி வந்த அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க. முன்னாள்  நிர்வாகிகளுடன் நேற்று இரவு தீபா சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பத்தில் உள்ள வீட்டில் அவர் ஆலோசனை நடத் தினார்.இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகிகளுக்கு பேரவை செயலாளர் ராஜா அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் தீபா தங்களுடன் தொடர்பு கொண்டு    பேசாததால் பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க மறுத்து விட்டனர். சிலர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தீபா அரசியலுக்கு வரப் போவதாக ஆரம்பத்தில் அறிவித்த போது அவரது வீட்டில் தினமும் ஆயிரக்கணக்கான தொடர்கள் திரண்டு வந்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக பிரிந்து சசிகலாவை எதிர்த்தார். இதையடுத்து தொண்டர்கள் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் திரண்டனர். அதே போல் தீபாவும் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அவர் தனி அமைப்பை உருவாக்கி விட் டார்.

இதனால் அ.தி.மு.க. அடிமட்ட தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது தீபாவின் வீட்டில் அ.தி.மு.க. தொண்டர்களின் கூட்டம் குறைந்து விட்டது. பதவி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சில நிர்வாகிகள் மட்டுமே அவரது வீட்டுக்கு வருகிறார்கள்.

இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் தலைமையை தீபா ஏற்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மா.பாண்டிய ராஜன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தற்போதைய நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை வரவேற்கிறேன். ஏற்கனவே இரு கரங்களாக நானும் ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுவோம் என்று தீபா ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து கூறினார். அதை அவருக்கு நினைவு கூருகிறேன்.

எங்களை பொறுத்தவரை அ.தி.மு.க. ஒரே இயக்கமாக செயல்பட வேண்டும். தீபா மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவிப்போர் அனைவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் எல்லோரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்று செயல்பட்டால் நன்றாக இருக்கும்” என்றார்.

இந்த நிலையில் பேரவையை கலைத்து விட்டு தீபா புது கட்சி தொடங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக தீபா மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதிய கட்சி தொடங்கி அதன் பெயரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். சென்னையில் இன்று தீபா பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் தீபா தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை தீபாவிடம் வழங்க உள்ளனர்.