நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை

திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் திரும்பிய நடிகை பாவனா, கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு கும்பலால் கடத்தப்பட்டார்.

ஓடும் காரில் அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகை பாவனா ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதன் விபரங்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.

மேலும் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது தாக்கல் செய்த ஆவணங்களில் போலீசார் தெரிவித்த தகவல்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

போலீசாரால் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட ஆவணங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது எப்படி நடந்தது? ரகசியங்களை யார் கசிய விட்டது? என்பதை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பாவனாவின் ரகசிய வாக்குமூலத்தை சமூக ஊடகங்களுக்கு தெரிவித்தது யார்? என்பதை ரகசியமாக விசாரித்து வருகிறார்கள். இது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.