நடிகை ஜோதிகாவின் பேச்சு – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் கண்டனம்

நடிகை ஜோதிகா, சமீபத்தில் விருது விழா ஒன்றில் பேசும்போது, ”தஞ்சாவூரில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தஞ்சை கோவிலின் பெருமையை கூறினார்கள். அங்கு செல்ல வேண்டும் என்றார்கள். நான் ஏற்கனவே பார்த்துள்ளேன் என்றேன். மறுநாள் படப்பிடிப்புக்காக கோவில் அருகே உள்ள மருத்துவமனைக்கு சென்றோம். அந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு இந்த கோவிலுக்கு செல்ல மனம் வரவில்லை. கோவிலில் காசு போடாதீர்கள். கோவில்களை பராமரிப்பது போன்று மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை பராமரியுங்கள் என்றார்.

ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு ஹிந்து மத தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கோவில், மருத்துவமனைகளை பராமரிக்க வேண்டும் அதில் எந்த மாற்ற கருத்தும் இல்லை. அதற்கு எதற்கு இந்து கோவில்களை சொல்ல வேண்டும். ஏன் மற்ற மத தளங்களை சொல்ல வேண்டியது தானே என கூறினர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோப ராமானுஜரும் ஜோதிகாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தஞ்சாவூர் கோவில் தொடர்பாக நடிகை ஜோதிகா கூறிய கருத்து வருத்தமளிக்கிறது. கோவில்களில் பணம் போடாதீர்கள் என்று கூறுவது தவறானது. கோவில்கள் இருப்பதால் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதேப்போன்று ஜோதிகாவின் குடும்பத்தார் நிறைய முறை பேசியிருக்கிறார்கள். இப்படி கூறுவது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இனிவரும் காலங்களில் இந்துமதம் குறித்து இவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.