‘‘நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் தலையிடக்கூடாது’’; சுருதிஹாசன் சொல்கிறார்

சென்னை,
சுருதிஹாசன் ‘பெஹென் ஹோகி தேரி’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். கமல்ஹாசனுடன் ‘சபாஷ்நாயுடு’ படத்திலும் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் நடக்க உள்ளது. ‘சங்கமித்ரா’ சரித்திர படத்தில் இருந்து படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலால் விலகிவிட்டார்.
சுருதிஹாசனை பற்றி அடிக்கடி கிசுகிசுக்களும் வருகின்றன. லண்டன் நடிகருடன் நெருங்கி பழகுவதாகவும், அவரை காதலிப்பதாகவும் தகவல்கள் பரவின. தற்போது அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்தி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறியதாவது:–
சொந்த வாழ்க்கை
‘‘நடிகைகளும் சாதாரண பெண்கள்தான். அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. சிலர் மற்றவர்கள் வாழ்க்கை விவகாரங்களில் எட்டிப் பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். நடிகைகள் வாழ்க்கையில் இதுபோன்றவை சகஜமானதுதான். ஆனால் எனது தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அத்துமீறி பேசுவது அசவுகரியமாக இருக்கிறது.
நடிகையாக இருப்பதால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. என் முகம் தோற்றம் பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனது முகமும், உடம்பும் எனக்கே சொந்தமானது. எதுவும் செய்வேன். அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
உடல் அமைப்பு
முகத்தை அழகாக வைத்து இருப்பது எனது தொழில் சம்பந்தப்பட்டது. கதாபாத்திரங்களின் தேவைகளை பொறுத்து உடல் எடையை கூட்டவும் குறைக்கவும் செய்கிறோம். அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி உடல் அமைப்பை பேணுவது கஷ்டமானது’’.  இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.