நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் திருப்பம்: அங்க அடையாளம் லேசர் சிகிச்சையில் அழிப்பு?

உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கலான மருத்துவ அறிக்கையால் பரபரப்பு

நடிகர் தனுஷ் தங்களது மகன் என மேலூர் தம்பதி தொடுத்த வழக்கு தொடர்பாக உயர் நீதி மன்றக் கிளையில் தாக்கல் செய்யப் பட்டுள்ள மருத்துவ அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் அங்க அடையாளம் ஒன்று லேசர் சிகிச்சையில் அழிக்கப்பட்டுள்ள தாக கூறப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் (60), அவரது மனைவி மீனாட்சி (55). இவர்கள் தங்களின் மூத்த மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என பல ஆண்டுகளாக உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் பராமரிப்புச் செலவு வழங்க நடிகர் தனுஷுக்கு உத்தரவிடக்கோரி, மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கதிரேசன் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார்.

தனுஷ் தனது மனுவில் தனது இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு என்றும், இப்பெயரை தனுஷ் என மாற்றிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் கதிரேசன் தம்பதியின் சார்பில் கலைச்செல்வன் என்ற பெயரிலுள்ள மாற்றுச் சான்றிதழ் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த பள்ளிச் சான்றி தழில் தனுஷ் உடலில் சில இடங் களில் மச்சங்கள், தழும்புகள் இருப் பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தனுஷ் தரப்பில் வெங்கடேஷ் பிரபு என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து கதிரேசன் தாக்கல் செய்துள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா என்பதை சரி பார்ப்பதற்காக, தனுஷ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த பிப். 28-ம் தேதி நேரில் ஆஜரானார்.

அப்போது கதிரேசன் தம்பதியினர் தாக்கல் செய்த சான்றிதழில் குறிப்பிட்டுள்ள அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் உள்ளதா? அவரது உடலில் அங்க அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளதா? அவ்வாறு அழிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதா? என்பதை தெரிவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து உயர் நீதிமன்ற பதிவாளர் அறையில் வைத்து நடிகர் தனுஷின் உடலில் உள்ள அங்க அடையாளங்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்துராஜு, துணை முதல்வர் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் சரிபார்த்து மூடி முத்திரையிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு மார்ச் 2-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கதிரேசன் தரப்பில் தனுஷுக்கும், தனக்கும் மரபணு சோதனை நடத்த உத்தரவிடக் கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து விசாரணையை மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து, மறு உத்தரவு வரும்வரை மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள கதிரேசன் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணைக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தர விட்டார்.

மீண்டும் இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த விசாரணை நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து தனுஷ் வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷின் அங்க அடையாளம் சரிபார்க்கப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கை கவரில் இருந்து பிரிக்கப்பட்டு இரு தரப்புக்கும் வழங்கப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கை தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்.27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

மச்சம் இல்லை

தனுஷின் மருத்துவ அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:

நீதிமன்ற உத்தரவுப்படி பதிவாளர் அறையில், நடிகர் தனுஷின் அங்க அடையாளங்களைப் பதிவாளர் முன்னிலையில் தனியறையில் சரிபார்த்தோம். அதன் விவரம்:

  1. பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட்டபடி இடது கழுத்து எலும்பின் மேல் பகுதியில் மச்சம் எதுவும் இல்லை. அதேபோல, இடது முன்னங்கையில் எந்த காயத்தழும்பும் இல்லை.
  2. உடலின் தோல் பகுதியில் மேற் பரப்பில் உள்ள சிறிய மச்சங்களை அகற்றிவிடலாம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் காயத் தழும்புகளை அகற்ற இயலாது. இந்த சிகிச்சை முறையில் காயத் தழும்பின் அளவைக் குறைக் கலாம்.
  3. தோலின் மேல் பகுதியில் சிறிய மச்சமானது, லேசர் சிகிச்சை மூலம் அடையாளம் தெரியாத அளவில் நீக்கப்பட்டுள்ளது. பெரிய அளவி லான மச்சம் அகற்றப்பட்டிருந்தால், அதன் எச்சங்களை நுண்ணோக்கி மூலம் காண முடியும். ஒரு தழும்பை இப்போதுள்ள நவீன பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பத்தால் அகற்ற முடியாது. ஆனால், அதன் அளவைக் குறைக்கலாம் என மருத்துவ அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

 

நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் சிறிய மச்சம் ஒன்று லேசர் சிகிச்சையில் அழிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த அறிக்கையில் தனுஷ் உடலில் இருந்து மச்சம் அகற்றப்பட்டதாக நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை.

மரபணு சோதனைக்கு தயார்

கதிரேசனின் வழக்கறிஞர் டைட்டஸ் கூறியதாவது: நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் அங்க அடையாளம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மரபணு சோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த சோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், தனுஷ் தரப்பில் மறுக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது எங்கள் தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைப்போம்.

கதிரேசன் தரப்பில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பராமரிப்புச் செலவு கோரிய வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், விரைவில் விசாரணையை முடிக்கவும் கோருவோம் என்றார்.

கதிரேசன் மனைவி மீனாட்சி:

நடிகர் தனுஷ் எங்கள் மகன்தான். மருத்துவ அறிக்கையில் தடயங் களை அழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதில் இருந்து அவர் எங்கள் மகன் என்பது உறுதி ஆகிறது.

தனுஷ் தரப்பு வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன்:

கதிரேசன் தம்பதி தெரிவித்த அங்க அடையாளம் தனுஷ் உடலில் இல்லை என்றுதான் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆதலால் இது எங்கள் தரப்புக்கு சாதகமான அறிக்கைதான் என்றார்.