நடராஜசிவம்-இலங்கையின் பிரபல வானொலி அறிவிப்பாளர் காலமானார்

இலங்கையின் மூத்த வானொலி அறிவிப்பாளரும், இலங்கை தமிழ் திரைப்பட கலைஞருமான எஸ்.நடராஜசிவம் நேற்றிரவு காலமானார்.

நடா அண்ணா என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட அவர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு வயது 74. 1946ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பிறந்த அவர் தனது 20ஆவது வயதுகளில் ஊடகத்துறைக்குள் நுழைந்தார். இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான ‘ரேடியோ சிலோன்’ வானொலி மூலம் தனது ஊடக வாழ்க்கையை தொடங்கிய அவர், 1980களில் இலங்கை சினிமாத்துறையிலும் கால் பதித்தார்.

‘லாஹிரு தகசக்’ சிங்கள நாடகத்தின் ஊடாக 1985ஆம் ஆண்டு நாடக வாழ்க்கைக்குள் நுழைந்தார். அதன்பின்னர் யசோராவய, அவசந்த, வனஸபந்து, யுக விலக்துவ ஆகிய சிங்கள நாடகங்களிலும் நடித்துள்ளார். அதன்பின்னர் தென்னிந்திய நிறுவனமொன்றின் தயாரிப்பில் உருவான ”மீண்டும் மீண்டும் நான்” நாடகத்தின் மூலம் அவர் புகழின் உச்சத்தை தொட்டிருந்தார்.

இந்திய கலைஞர்களின் நடிப்பில் உருவான பாதை மாறிய பருவங்கள், புலம்பெயர்ந்தோரினால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட காதல் கடிதம் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும், திரிசூல, யுக கினிமத்த, திகவி உள்ளிட்ட பல சிங்கள திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இலங்கை தமிழர்கள் மாத்திரமன்றி, சிங்கள சமூகமும் ஏற்றுக்கொண்ட ஒரு கலைஞராக எஸ்.நடராஜசிவம் திகழ்ந்தார்.

இந்த நிலையில், இலங்கை தமிழ் வானொலித்துறையை வேறொரு திசையை நோக்கி நகர்த்திய பெருமையும் அவரையே சாரும்.இலக்கியத் தமிழ் பேச்சு நடையை மாற்றி, பேச்சுத் தமிழ் நடையில் இலங்கை வானொலியை நகர்த்தியவர் இவரே.

1998ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தனியார் வானொலியான சூரியன் வானொலியின் முதலாவது முகாமையாளராக அவர் கடமையாற்றியிருந்தார். அந்த காலப் பகுதியிலேயே இலங்கை வானொலித்துறை வேறொரு திசையைநோக்கி நகர ஆரம்பித்திருந்தது.

இன்று இலங்கையில் மாத்திரமன்றி, உலகிலுள்ள பல தமிழ் ஊடகத்துறையினரை உருவாக்கிய பெருமை எஸ்.நடராஜசிவத்தையே சாரும். இந்த நிலையில், அவரின் மறைவை ஒட்டி பலரும் தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர். உலக புகழ் பெற்ற அறிவிப்பாளரான பி.எச்.அப்துல் ஹமீது தனது அனுதாபத்தை பேஸ்புக் ஊடாக வெளியிட்டுள்ளார். என் ஆருயிர் தோழனை இழந்தேன் என்ற தலைப்பில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.