தேர்தல் கமி‌ஷன் வழக்கு சம்பந்தமாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை எடப்பாடி பழனிசாமி

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதியின் மகன் எஸ்.ஸ்ரீராம்–பூஜாலெட்சுமி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:

கேள்வி:– நீங்கள்(முதல்–அமைச்சர்) உள்பட அமைச்சர்கள் பலர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டு உள்ளதே?

பதில்:– நீங்கள் (பத்திரிகையாளர்) சொல்லித்தான் தெரியும். எங்களுக்கு எந்த தகவலும் இல்லை.

கேள்வி:– ஓ.பன்னீர்செல்வம் அரசு கோப்புகள் தேங்கி கிடக்கிறது என்று கூறி உள்ளாரே?

பதில்:– எந்த கோப்புகளும் தேங்கவில்லை. அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்டு, அரசாணை வெளியிட்டு திட்ட பணிகள் நடந்து வருகிறது. ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சிப்பொறுப்பேற்று 4 மாத காலத்தில் அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மிகப்பெரிய திட்டமான குடிமராமத்து திட்டத்தின் கீழ் வண்டல் மண் தற்போது விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ரூ.100 கோடியில் 1519 ஏரிகள் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடியும் நிலையில் உள்ளது. அடுத்த கட்டமாக ரூ.300 கோடியில் 2065 ஏரிகள் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்து திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

கேள்வி:– முதல்–அமைச்சர் துணிச்சலோடு செயல்படவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளாரே?

பதில்:– எது என்று சொன்னால் பதில் சொல்ல முடியும். திட்டம் நிறைவேற்றுவது தானே துணிச்சல். அதன்படி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கேள்வி:–மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் அ.தி.மு.க.வில் இல்லை என்று தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறாரே.அ.தி.மு.க.வில் இவ்வளவு தலைவர்கள் இருந்தும் இவ்வாறு கருத்து நிலவ என்ன காரணம்?

பதில்:– ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு உள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை சில பிரச்சினைகள் இருக்கிறது. அது தீர்க்கப்பட்டு இருக்கிறது. கடந்த 140 ஆண்டுகள் இல்லாத அளவில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையிலும் மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் முழுமையாக ஆதரவு அளித்து வருகிறார்கள். எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். ஜெயலலிதா அரசு வேகமாக, துரிதமாக செயல்பட்டு அனைத்து துறைகளும் வளர்ச்சி நிலையில் உள்ளது. அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

அவர் (ஸ்டாலின்) என்றைக்கு சட்டப்பேரவைக்கு வந்தாரோ அப்போது நானும் 1989–ம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு வந்தேன். அவருக்கு என்ன தகுதி இருக்கிறதோ, அதே தகுதி எங்களுக்கும் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.