தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும் பன்னீர்செல்வம் தரப்பு

தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் சசிகலா எடுத்த முடிவுகள் செல்லாமல் போகும் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சசிகலா அறிவித்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்கஉள்ளார். ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக புகார் தொடர்பாக ஆலோசித்து வரும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே விளக்கம் கோரிஉள்ளது. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று தேர்தல் ஆணையத்தை நேரடியாக சந்தித்து நிலை குறித்து பேசிஉள்ளனர். ஓபிஎஸ் ஆதரவு 10 எம்பிக்கள், பி.ஹெச். பாண்டியனுடன் டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை மைத்ரேயன் எம்.பி. சந்தித்து பேசிஉள்ளார்.

இந்நிலையில் பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது, தினகரன் துணை பொதுச்செயலாளராக  நியமனம் செய்யப்பட்டதும் செல்லாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எம்.எல்.ஏ.  பாண்டியராஜன் பேசுகையில், சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறோம். தொண்டர்கள் அனைவரும் பன்னீர்செல்வம் பின்னால் இருக்கிறார்கள். குடும்ப ஆட்சி வராமலிருக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம், மக்கள் இவர்களை ஏற்கமாட்டார்கள் என்றார்.

சசிகலா தரப்பில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மக்களின் கருத்தைகேட்டும், நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் மனசாட்சிப்படியும் வாக்களிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ. செம்மலை பேசுகையில், மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்சி விரைவில் மலரும், நல்லாட்சி மலரும் வரையில் தர்ம யுத்தம் தொடரும் என்றார். தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது சட்டபடி செல்லாது, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளோம் என அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நீதி கேட்டு தமிழக மக்களை சந்திக்க பன்னீர்செல்வம் பயணம் மேற்கொள்கிறார், மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆட்சி விரைவில் மலரும் என செம்மலை பேசிஉள்ளார். பொன்னையன் பேசுகையில் தற்காலிக பொதுச்செயலாளருக்கு எந்த அதிகாரமும் இல்லை, எங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது. எனவே, நாங்கள் அதே பதவியில் நீடிக்கிறோம். பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டும், அவர் நேர்மையானவர், எளிமையானவர் என்று கூறிஉள்ளார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் நியமனத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. துணை பொதுச்செயலாளர் நியமனம் சட்டவிதிமுறைகளை மீறியது, அவர் அப்பணியை மேற்கொள்ள முடியாது என பொன்னையன் கூறிஉள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளருக்கான வாக்குப்பதிவு தொண்டர்கள் மத்தியில் நடத்தப்படும் என்றும் பொன்னையன் கூறிஉள்ளார்.