தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேச்சு

குரங்கணி காட்டுத்தீ மீட்பு பணிகள் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியருடன் நிர்மலா சீதாராமன் பேசிஉள்ளார்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீட்கப்படும் மாணவிகளுக்கு முதலுதவி வழங்கும் வகையில் ஆம்புலன்ஸ்களும் அடிவாரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மாவட்ட ஆட்சியருடன் பேசிஉள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், தேனி மாவட்ட ஆட்சியாளருடன் சற்று முன் தொலைபேசி மூலம் பேசினேன்.

10-15 மாணவர்கள் மலையிலின் அடிவாரத்திற்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தீயணைப்பு படை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர். அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்களையும் அனுப்பியிருந்தாக தெரிவித்தார். விமானப்படை சூலூரிலிருந்து ஹெலிகாப்டர்களை அனுப்புகிறது குறிப்பிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசுகையில், “விபத்து நேரிட்ட பகுதியில் எத்தனை மாணவிகள், மாணவர்கள் உள்ளனர் என்பது தொடர்பாக தெளிவான தகவல்கள் கிடையாது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் பேசிஉள்ளேன். மீட்கப்பட்டு மாணவிகளில் தங்களால் நடக்க முடியும் என கூறுபவர்களை கீழே அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவியை வழங்க ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. தீயின் ஆக்ரோஷம் எப்படி உள்ளது என்பது தொடர்பாக விமானப்படை ஆய்வு மேற்கொள்ளும். கோவை மாவட்டம் சூலூரில் இருந்து விமானப்படை விமானங்கள் அங்கு விரைந்து உள்ளன. தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விமானப்படை தரப்பிலும் தேவையான உதவிகள் ஏற்பாடு செய்யப்படும். மருத்துவ குழுவும் செல்லும். இப்போது தொடர்பாக விரிவான தகவல் எதுவும் கொடுக்க முடியாது. தேவையான அளவிற்கு செல்வார்கள். மாவட்ட ஆட்சியருடன் பேசிஉள்ளேன். இப்போது விமானப்படை ஆய்வை மேற்கொள்ளும், காலையில் மீட்பு பணிகளில் ஈடுபடும். இரவில் மீட்பு பணிகள் என்பது கடினமானது,” என கூறிஉள்ளார்.

காட்டுத்தீ ஏற்பட்ட பகுதிகள் ஆயுவு செய்யப்பட்ட பின்னர் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என குறிப்பிட்டு உள்ளார்.