தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வைகோவின் ஜாமீன் மனு இன்று 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர் வைகோவை நிபந்தனையின்றி ஜாமீனில் விடுவதற்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.

வைகோ தரப்பு வழக்கறிஞரும் தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புருஷோத்தமன் வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக 51 நாட்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ நேற்று ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். 2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டு, வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ஏப்ரல்(2017)3ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஆஜரான வைகோ, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்யுமாறு தானாக முன் வந்து மனு தாக்கல் செய்தார், இருப்பினும் நீதிபதி கோபிநாத் வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார், ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ சிறைக்கு சென்றார். அடுத்த வந்த இரண்டு விசாரணைகளிலும் ஜாமீன் பெற வைகோ மறுத்து வந்தார்.

ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் மற்றும் சிறைத்துறை நடைமுறைகளை முடித்துக் கொண்டு நாளை காலை புழல் சிறையிலிருந்து வைகோ வெளியே வருவார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.