தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு சென்னை ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸார் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார்.

இந்நிலையில், சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த இன்று (திங்கள்கிழமை) வைகோ நீதிபதி முன் சரணடைந்தார். அப்போது, சொந்த ஜாமீனில் செல்ல அவருக்கு நீதிமன்றம் வாய்ப்பளித்தது. ஆனால், வைகோ அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து வைகோவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.