தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்

ஐதராபாத்: தெலுங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பக்தரை, அர்ச்சகர் தோளில் சுமந்து, கோவில் கருவறைக்குள் அழைத்துச் சென்றார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில், ஜியாகுடா என்ற இடத்தில், புகழ்பெற்ற ரங்கநாதர் கோவில் உள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர், சி.எஸ்.ரங்கராஜன், 60; தெலுங்கானா மாநில கோவில் பாதுகாப்பு கமிட்டித் தலைவர் மற்றும் ஆன்மிக பேச்சாளர். தெலுங்கு, தமிழ்மொழிகளில், பல கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்துபவர். இவர் தாழ்த்தப்பட்ட மக்களும் ஆன்மிக பணியில் ஈடுபட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தலித் பக்தரை தோளில் சுமந்து கருவறைக்குள் செல்ல திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தலித் இளைஞர் ஆதித்யா பாராஸ்ரீயை தனது தோளில் அமர வைத்த ரங்கராஜன், மாலை மரியாதையுடன் ஊர்வலமாக கோவில் கருவறைக்குள் அவரை தூக்கிச் சென்றார். ஆதித்யாவுக்கு முண்டாசு கட்டி கழுத்தில் மாலையும் சூடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தெரிவித்த அர்ச்சகர் ரங்கராஜன், இந்த நிகழ்வின் நோக்கம் சமத்துவத்தை பரப்புவதே என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தலித் இளைஞர் ஆதித்யா தெரிவிக்கையில், இந்நிகழ்வு மாற்றத்திற்கான தொடக்கம் எனக் கூறினார்.