தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 100-வது நாளன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களைநோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 13 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்றும் மனுதாரர் சிபிஐயிடம் மனு கொடுக்கலாமே என யோசனை தெரிவித்தார். மேலும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.