துப்பாக்கி வாங்க படையெடுக்கும் அமெரிக்கர்கள் – கொரோனா வைரஸ்

கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் அமெரிக்க மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 12 மாகணங்களில் கொரோனா வைரசால், 3,774 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 69 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பெரும் பீதி அடைந்துள்ள, அமெரிக்க மக்கள், வெளியில் நடமாட அஞ்சுகின்றனர். அதனால், கழிவறைக்குப் பயன்படுத்தப்படும் பேப்பரைக் கூட, அதிகளவில் வாங்கி சேமித்து வைத்துள்ளனர். இதனால் அதற்கு அங்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் சமீபத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது அமெரிக்காவில், ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளில் கொள்ளையர்கள் தங்களது கைவரிசையைக் காட்டத் துவங்கியுள்ளனர். கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் துப்பாக்கி வாங்க, ஆயுதங்கள் விற்கும் கடைகள்முன் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.

கொரோனாவை விட கொள்ளையர்களிடமிருந்து தங்களை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்து, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், ஆயுத விற்பனைக் கடைகள் முன் காத்திருக்கும் படங்களை பதிவிட்டு வருகின்றனர்.