தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது !!

தமிழக அரசியல் களம் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதையொட்டி, நேற்று நடந்த பா.ஜ., மாநில செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா, தி.மு.க.,வை கிழித்தெடுத்தார். இதைக் கருத்தில் கொள்கையில், தி.மு.க.,வுடன் எக்காரணம் கொண்டும், கூட்டணியில் பா.ஜ., சேராது என்பது தெளிவாகிறது.

அதே நேரம், காங்கிரஸ் மேலிடத்தில் நிலவும் குழப்பத்தால், தமிழக காங்., தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி குழப்பம் நீடித்தால், தி.மு.க.,விடம் அதிரடியாக பேரம் பேசி, ‘சீட்’ வாங்குவது கடினம் என்றும் வருத்தப்படுகின்றனர். நேற்றைய சம்பவங்கள், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தரப்பில், கூட்டணி வியூகம் வகுக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளதைக் காட்டுகின்றன.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, எட்டு மாதங்களே உள்ளதால், கொரோனா பரவலுக்கு மத்தியிலும், தமிழக கட்சிகள் தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத நிலை உள்ளது. இந்நிலையை, வரும் தேர்தலில் மாற்றி, குறைந்தது 25 எம்.எல்.ஏ.,க்களை, சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பதை, பா.ஜ., இலக்காக வைத்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளையும் துவக்கி உள்ளது.

இதுபற்றி விவாதிப்பதற்காக, தமிழக பா.ஜ., செயற்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் முருகன் தலைமையில், நேற்று நடந்தது. அதில், காணொலி காட்சி வாயிலாக, தேசிய தலைவர் நட்டா பேசுகையில், தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள, தி.மு.க.,வை கிழித்தெடுத்தார்.

நட்டா பேசியதாவது: தேசம் மற்றும் தேசியத்திற்கு எதிரான உணர்வுகளை, தி.மு.க., துாண்டி விட்டு இருக்கிறது. எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம், இந்த பணியைச் செய்ய, அக்கட்சி தவறுவதில்லை. நாட்டின் தேசிய நீரோட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்வதே, எப்போதும் நன்மை தரும். ஆனால், தேசிய உணர்வுகளுக்கு எதிராக, மக்களை தூண்டி விடுவதோடு மட்டுமல்லாது, தேசிய நீரோட்டத்தில், யாரும் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என, அக்கட்சி விரும்புகிறது.

தேசிய நீரோட்டம் சீர்குலைந்து கொண்டிருப்பதை பார்க்க, அக்கட்சி ஆர்வமாக உள்ளது. தி.மு.க.,வின் இந்த எண்ணம், நாட்டின் முன்னேற்றத்திற்கு விரோதமானது. வளர்ச்சி திட்டங்களுக்கு, தி.மு.க., எதிரான கட்சி. ஒவ்வொரு விஷயத்திலும், அக்கட்சி மேற்கொள்ளும் நிலைப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் வைத்தே, இதை தெளிவாக காண முடியும்.கருப்பர் கூட்டம் விவகாரத்தில், தமிழக மக்கள் அனைவருமே, தேசிய உணர்வோடு கூடி, தங்களது ஒற்றுமையை காட்டினர்.

பிரிவினைவாத சக்திகள், தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் பலம் பெற்று விடக் கூடாது. நாடு முன்னேற்றப் பாதையில் சென்று விடக் கூடாது என, பல சக்திகள், முனைப்புடன் இயங்கி வருகின்றன. தேசிய நலனுக்கு எதிரான, அதுபோன்ற சக்திகளுக்கு, தமிழகத்தில், தி.மு.க., புகலிடம் தந்துள்ளது. இதை முறியடிக்க, நாம் தான் மிகுந்த விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும்.

சரியாக திட்டமிட்டு, நாம் தீவிரமாக களத்தில் இயங்கினால், இதுபோன்ற கட்சிகளுக்கும், தேசவிரோத சக்திகளுக்கும், சரியான பதிலடி தர முடியும். ஏற்கனவே நடந்த, உள்ளாட்சித் தேர்தல்களில், பா.ஜ., கணிசமான வெற்றிகளை பெற்றது. வரும் சட்டசபை தேர்தல் முடிவுகளின் போதும், பா.ஜ.,வுக்கான வெற்றி பங்கீடு, மேலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

தேர்தல் பணிகளில், பா.ஜ., தீவிரமாக உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடத்தில், தலைவரை முடிவு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. அதனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. தேசிய கட்சியாக இருந்தும், தி.மு.க., உரிய முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்து வருகிறது என்ற வருத்தம், காங்கிரசாரிடம் உள்ளது. தற்போது, கட்சி மேலிடத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக, தி.மு.க.,விடம் பேரம் பேசி, ‘சீட்’ பெற முடியாத நிலை ஏற்படுமோ என்ற அச்சம், மாநில காங்., தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க.,- – தே.மு.தி.க., போன்ற கட்சிகளும்; தி.மு.க., கூட்டணியில் உள்ள, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும், தற்போதைய கூட்டணியில், உரிய இடம் கிடைக்காவிட்டால், வேறு கூட்டணிக்கு மாறலாமா என, ஆலோசித்து வருகின்றன. அதற்கு ஏற்ப, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், சட்டசபை தேர்தலுக்கான வியூகம் வகுப்பதில் ஈடுபட்டுள்ளன.

எந்த கூட்டணியில் சேருவது; எத்தனை இடங்களை கேட்பது என்பது தொடர்பாக, எல்லா கட்சிகளிலும் விவாதம் நடக்கத் துவங்கி உள்ளதால், தமிழக அரசியல் களம் சூடு காண ஆரம்பித்து உள்ளது.