திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யவேண்டும்

பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசின் பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீது 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதைக் கண்டித்து திரையரங்குகள் மூடப்பட்டிருகின்றன. ஏழை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு காரணமான தமிழக அரசின் புதிய வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அவை அமைந்துள்ள இடங்களைப் பொறுத்து அதிகபட்சமாக 35 சதவீதம் வரை கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கேளிக்கை வரி தானாகவே செயல் இழந்து இருக்கவேண்டும். நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கேளிக்கை வரி ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் ஏற்படும் இழப்பு ஜி.எஸ்.டி வரியில் மாநிலத்துக்கு கிடைக்கும் பங்கிலிருந்து ஈடுகட்டப்படும். இதை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், தமிழக அரசு மட்டும் இந்த வரியை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்திருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் இவ்வாறு செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளின் வரி வருவாய் மீது இவ்வளவு அக்கறை காட்டும் தமிழக அரசு, இதற்கு முன், தமிழில் பெயர் சூட்டப்பட்ட படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை இன்று வரை ஈடு செய்யவில்லை. அதேபோல் வரிவிலக்கு ரத்து செய்யப்பட்டதன் பயனை படம் பார்ப்பவர்களுக்கு வழங்காமல் திரைப்பட தயாரிப்பாளர்களும், திரையரங்க உரிமையாளர்களும் அனுபவித்தபோதும் அதை அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தது.

இப்போதே திரையரங்குகளில் வார இறுதி நாட்களை தவிர மற்ற நாட்களில் கூட்டம் வருவதில்லை. புதிய வரி விதிப்பால் திரையரங்குகளும், திரைத்துறையும் பாதிக்கப்பட்டால் கூலித் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு திரையரங்குகள் மீதான கேளிக்கை வரி விதிப்பை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.