திருப்பரங்குன்றத்தில் மோதும் ஓபி,ஐபி: வெற்றிக்கனியை பறிக்கும் கட்டாயத்தில் அதிமுக – திமுக

திருப்பரங்குன்றத்தில் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும்,திமுகவில் ஐ.பெரியசாமி தலை மையிலும் தேர்தல் பணிக்குழு அமைக்கப் பட்டுள்ளதால் தீபாவளியை விஞ்சும் வகையில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.

தஞ்சாவூர்,அரவக்குறிச்சி,திருப்பரங் குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் சோர்ந்து போய் உள்ள அதிமுகவினருக்கு தற்போதுள்ள தமிழக அரசியல் சூழலில் இந்த 3 தொகுதிகளின் வெற்றி முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த தொகுதிகளில் வென்றால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கையில் திமுகவினர் இருக்கின்றனர். அதனால்,3 தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்நோக்கியுள்ளதால் வெற்றிக்கான நெருக்கடியில் திமுக,அதிமுகவினர் உள்ளனர். அரவக்குறிச்சியில் முன் னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி,திமுகவில் கே.சி.பழனிச்சாமி போட்டி யிடுவதால் ஆரம்பத்தில் இந்த தொகுதி தேர்தலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும்,திமுகவில் அக்கட்சி மாநில துணைப் பொதுச் செயலர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியும் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளதால் இந்த தொகுதி தேர்தல் தற்போது எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸும்,திமுக வேட்பாளராக டாக்டர் பி.சரவணனும் போட்டியிடுகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தல் குழுவில் அமைச் சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன்,ராஜேந்திரபாலாஜி,செல்லூர் கே.ராஜு,ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஐ.பெரியசாமி தலைமையிலான திமுக குழுவில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடபட்டி முத்தையா,மதுரை புறநகர் மாவட்டச் செயலர் மூர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம்,ஐ.பெரியசாமி இருவருமே அவரவர் கட்சியில் முக்கிய இரண்டாம் கட்ட தலைவர்களாக உள்ளனர். ஏராளமான இடைத்தேர்தல்களில் பணிபுரிந்த அனுபவம் இவர்களுக்கு இருக்கிறது. ஆளும்கட்சியாக இருந்து அதிமுக தோல்வியடைந்தால் கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கான இடம் கேள்விக்குறியாகிவிடும். திமுகவில் சமீப காலமாக மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து முக்கியத்துவம் பெற்றவராக இருக்கும் ஐ.பெரியசாமி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுக் கொடுத்தால் அவர் கட்சியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதனால்,இந்த தொகுதி தேர்தல் வெற்றி,இந்த இருவருக்குமே கவுரவப் பிரச்சினையாக உருவாகியுள்ளது.

அதிமுகவில் ஒவ்வொரு பூத்திலும் திமுகவைவிட கூடுதல் வாக்குகள் பெற்று கொடுக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என நெருக்கடி கொடுக் கப்பட்டுள்ளது. திமுகவில் சேடபட்டி முத்தையா,திருப்பரங்குன்றம் தேர்தல் வெற்றிக்காக திருமங்கலம் பார்முலாவை செயல்படுத்துவோம் என பகிரங்கமாகவே அறிவித்துள்ளார்.

ஆத்தூரில் முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதனை தோற்கடித்த ஐ.பெரியசாமி,தன்னுடைய தேர்தல் வியூகத்தையும் திருப்பரங்குன்றத்தில் செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள் ளார்.

திருப்பரங்குன்றம் தேர்தல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம்,ஐ.பெரி யசாமியின் தேர்தல் வியூகத்தால்,இந்த தேர்தலுக்குபின் திருமங்கலம்,ஆத்தூர் பார்முலா மறைந்து திருப்பரங்குன்றம் பார்முலா என சொல்லுமளவுக்கு இந்த தொகுதியில் தீபாவளியை விஞ்சும் வகையில் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ளது.