‘தவறு நடந்தது உண்மை தான்’: மவுனம் கலைத்தார் பேஸ்புக் நிறுவனர்

5 கோடி பேரின் தகவல்கள் பேஸ்புக்கிலிருந்து திருடப்பட்டது குறித்து மவுனம் கலைத்த அதன் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், ‘தவறு நடந்தது உண்மை தான்’ எனத் தெரிவித்துள்ளார்.

2016ல் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சுமார் 5 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் பேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், தவறு நடந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளதாகவும், வருங்காலங்களில் இது போன்ற தகவல் திருட்டுகளை சகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட ‘ஆப்’களை பேஸ்புக் தணிக்கை செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.