தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி அமைதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் கோத்தபயா – மோடி

வலிமையான இலங்கை அமைய வேண்டும் என்பதற்காக மக்கள் கோத்தபயவை தேர்வு செய்தனர். வலிமையான இலங்கை என்பது இந்தியாவின் நலன்களுக்கு மட்டும் அல்லாமல், இந்திய கடல் பகுதிக்கும் முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியா இலங்கை இடையே வலிமையான உறவு உள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில், இலங்கைக்கு நாம் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் கண்டனம் தெரிவிப்பதுடன், போரிட்டும் வருகிறது.

இலங்கைக்கு, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்காக 50 மில்லியன் டாலரும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 400 மில்லியன் டாலரும், சோலார் திட்டங்களுக்காக 100 மில்லியன் டாலர் நிதியுதவியை இந்தியா செய்யும். இலங்கையில், இந்தியா சார்பில் 46 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்களுக்காக கூடுதலாக 14 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்படும்.

இலங்கை மறுசீரமைப்பு குறித்து, இலங்கை அதிபர் தனது கருத்தை என்னிடம் தெரிவித்தார். இலங்கையை மறுசீரமைப்பது என்ற அடிப்படையில், முந்தைய அரசு மேற்கொண்ட, தமிழ் மக்களுக்கு மரியாதை, சமநிலை, சமூக நீதி, அமைதி போன்ற நடவடிக்கைகளை கோத்தபயா மேற்கொள்வார் என நம்புகிறேன். 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்துவதன் மூலமும் இலங்கையில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் . இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின் கோத்தபய கூறுகையில், இலங்கை பிடித்து வைத்துள்ள இந்திய படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி இலங்கை வர வேண்டும் என்றார்.