தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள்

உலகில் வர்க்க வேறுபாடுகள் தொடர்பாக இடதுசாரி கருத்துகளை விதைத்த அரசியல் ஞானிகள் எழுதிவைத்த பல விடயங்கள் இன்னும் எரிந்து கொண்டே இருக்கின்றன. கொம்யூனிசத்தை அழித்து விட்டோம் என்று அமெரிக்க அரசியல் பீடம் உரத்துச் சத்தமிட்டாலும் இடதுசாரிச் சிந்தனைகள் இன்னும் அழிந்து போகாமலே இருக்கின்றன.

இந்த உண்மை தற்போது இலங்கையில் நிதர்சனமாகவே தெரிகின்றது. நாம் சில வாரங்களுக்கு முன்னர் எழுதிவைத்த ஒரு விடயத்தை மீண்டும் ஒரு தடைவ இங்கே பதிவு செய்ய விரும்புகின்றோம் “ஆள்பவர்களும் ஆள நினைப்பவர்களும் என்னும் ஆளும் வர்க்கத்தோடு இணைந்து செயற்படவே எண்ணுவார்கள்” என்பதே எமது கருத்தாக முன்னர் எழுதினோம்.

தமிழ் பேசும் அரசியல் கைதிகளின் வலிகளையும் வேதனைகளையும் உணர்ந்து செயற்படும் தென்னிலங்கைத் தோழர்கள் பலரை நாம் நேரடியாகவும் செய்திகள் வாயிலாகவும் தரிசிக்கின்றோம். அவர்கள் ஆள்பவர்களோ அன்றி ஆள நினைப்பவர்களோ அல்ல. பாதிக்கப்பட்டவர்களின் குரல்களாகவே தங்களை அடையாளப்படுத்த விரும்புகின்றார்கள் என்பது புலனாகின்றது.

மைத்திரி –ரண்pல்- சம்பந்தன் கூட்டு அரசின் அடக்கு முறையின் ஒரு விளைவாக அநுராதபுரம் சிறைச்சாலையில் பல தமிழ் பேசும் அரசியல் கைதிகள் கடந்த பல வருடங்களா கம்பிகளை எண்ணியவண்ணம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். 14ஆவது நாளாக 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

காலி முகத்திட லில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.எஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இப்போராட்டத்தில் பிக்கு மாணவர்கள் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இவ்வாறாக தமிழ் பேசும் கைதிகள் தொடர்பாக கண்களை மூடிய வண்ணம் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைப் போல் அல்லாது, அவர்களுக்காக இரக்க சுபாவத்தோடு போராடுகின்ற அனைத்து பௌத்த சிங்கள தோழர்களையும் பிக்குகளையும் நாம் போற்றுகின்றோம்.

அரசியல் கைதிகள் விவகாரம் மீண்டும் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடப்பட விருக்கின்றதாம்???

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக அலரி மாளிகையில் நேற்றுமுன்தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருந்தார். அதேவேளை, அரசியல் கைதிகளுக்கு எதிரான வழக்குகளை விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுப்பதாக, சட்டமா அதிபர் உறுதியளித்திருந்தார் இந்தநிலையில், அரசியல் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வு காண்பது தொடர்பாக மற்றொரு சுற்று கலந்துரையாடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.