தமிழ்மொழிக்கு மோடி பாராட்டு: தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சியா?

மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ் மொழியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிப் பேசியுள்ளார். இதன் பின்னணியில் தமிழகத்தில் பாஜக காலூன்றும் முயற்சி இருப்பதாக கருத்து எழுந்துள்ளது.

நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சர்தார் பட்டேல் பிறந்த நாள் கொண்டாடப்படும் முக்கியத் துவத்தை எடுத்துக்கூறினார். ‘ஒரே நாடு, உயர்ந்த நாடு’ என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இது கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார். அப்போது நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை சுட்டிக் காட்டினார். இதில் குறிப்பாக தமிழ்மொழி குறித்து அவர் பேசியது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற எடுத்த முயற்சி என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “ஒற்றுமையை வளர்க்கும் விஷயங்களில் பலம் பெறுவது எப்படி என்ற நிரந்தர முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். பல சமயங்களில் நம் நாட்டின் சிறப்புகளை நாம் அறியாத நிலையில் உள்ளோம். இரு மாநிலங்கள் தங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இட்டு, இருமாநில கலாச்சாரங்களை ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். உதாரணமாக தமிழ்நாட்டின் தமிழ்மொழி ஒரு பூரண மொழியாகும். நம் நாட்டின் பெருமைக்கு தமிழ் மொழி பலம் அளிக்கிறது. தமிழ் மீதான அறிமுகம் நம்மில் பலருக்கும் இல்லை. எனவே தமிழ்நாட்டுடன் பிற மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டு, தமிழ் பாடல்களைக் கற்கலாம். பத்து தமிழ் வாக்கியங்களைப் பேசக் கற்கலாம். அம்மொழி எழுத்துகளை அடையாளம் காணலாம். தமிழ் திரைப்பட விழாக்களை வேறு மாநிலங்களில் நடத்தலாம். தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டு நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம். பிற மாநில குழந்தைகள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா செல்லலாம்.

பிற மாநில கலாச்சாரத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு உகந்த மாநிலத்தைத் தேர்வு செய்யலாம்” என்றார்.

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவில் பாஜக காலூன்ற முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் தமிழ் மொழியை பாராட்டி பிரதமர் மோடி பேசியிருப்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுகுறித்து பாஜக தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘ஆர்கனைசர்’ இதழின் முன்னாள் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, ‘தி இந்து’விடம் கூறும்போது, “தென்னிந்திய மொழிகளில் தமிழுக்கு இருக்கும் முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கு இல்லை. இதனால் தமிழைப் பிரதமர் பாராட்டிப் பேசியதில் ஆச்சரியம் இல்லை. தமிழ் மொழியை பிரதமர் பாராட்டிப் பேசுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட மலேசியாவில் தமிழுடன் திருவள்ளுவர் குறித்தும் பிரதமர் பேசியுள்ளார். தமிழகத்தில் பல மேடைகளிலும் மோடி தமிழ் வார்த்தைகள் பலவற்றை பேசியுள்ளார். இதை உள்நோக்கத்துடன் பார்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார்.